11-வது யுவா கபடி தொடர் கோவை கற்பகம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. கடந்த 14 ஆம் தேதி முதல் ஜனவரி 10 ஆம் தேதி வரை நடக்கும் இந்தத் தொடரை சென்னையைச் சேர்ந்த விளையாட்டு ஊக்குவிப்பு நிறுவனமான எலிவ்8 இந்தியா ஸ்போர்ட்ஸ் அமைப்பு நடத்தி வருகிறது.
இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு கோவை உப்பிலிபாளையத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் மன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது, யுவா கபடி தொடரின் தலைமை நிர்வாக அதிகாரி விகாஸ் கே கவுதம் மற்றும் போட்டியின் இயக்குநர் ஹரிஷ் பிரசாத் ஆகியோர் கூறியதாவது:-
கோவை கற்பகம் பொறியியல் கல்லூரியில் நடைபெறும் இந்த கபடி போட்டிகளில் கலந்து கொள்ள 21 மாநிலங்களைச் சேர்ந்த 26 அணிகள் பங்கேற்று வருகின்றது. இந்த போட்டிகளானது 1,2,3 என 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 3-வது மற்றும் 2-வது பிரிவுகளில் தலா 37 போட்டிகளும், முதலாவது பிரிவில் 29 போட்டிகளும் நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் வலுவான அணிகளான தமிழ்நாட்டைச் சேர்ந்த சென்னை தமிழாஸ், கற்பகம் ரைடர்ஸ், மற்றும் பழனி டஸ்கர்ஸ் ஆகிய 3 அணிகள் இடம்பெற்றுள்ளது. மற்ற மாநிலங்களான ஹரியானாவிலிருந்து 3 அணிகளும், ராஜஸ்தானில் இருந்து 2 அணிகளும் பலம் வாய்ந்தவையாக விளங்குகின்றது.
கடந்த 10-வது யுவா கபடி தொடரின் பதிப்புகளில் தமிழகத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட வீரர்கள் விளையாடினர். அவர்களில் 16 பேர் புரோ கபடி லீக்கு தேர்வாகி விளையாடி வருகின்றனர். இது இந்தியாவின் கபடி அரங்கில் மிகப்பெரிய உயரமாக கருதப்படுகிறது.
தமிழகம் போல இந்த தொடர்களில் விளையாடிய பிற பகுதிகளை சேர்நத 120க்கும் மேற்பட்ட வீரர்கள் புரோ கபடி லீக்கில் இடம்பிடித்துள்ளார்கள். மொத்த பரிசுத் தொகை ரூ.20 லட்சம். இந்த தொடருக்கான இறுதிப் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“