23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் 2026 ஆம் ஆண்டு ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 2 வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த தொடரில் இருந்து கிரிக்கெட், ஹாக்கி, மல்யுத்தம் போன்ற இந்தியா அதிக பதக்கங்கள் வெல்லும் விளையாட்டுகளை நீக்கியுள்ளதாக காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பட்ஜெட்டுக்கு ஏற்றதாக இருக்கும் முயற்சியில் 10 விளையாட்டுகள் மட்டுமே இடம்பெறும் என்றும், ஹாக்கி, பேட்மிண்டன், துப்பாக்கி சுடுதல் மற்றும் மல்யுத்தம் போன்ற இந்திய விளையாட்டு வீரர்கள் சிறந்து விளங்கும் முக்கிய விளையாட்டுகள் அனைத்தும் திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இடம் பெற்ற 19 விளையாட்டுகளுடன் ஒப்பிடும்போது, கிளாஸ்கோ 2026 தொடரில் இருந்து போட்டிகள் குறைக்கப்பட்டு இருப்பதாக காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பு (CGF) உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படி, கிரிக்கெட், டேபிள் டென்னிஸ், ஸ்குவாஷ், சாலைப் பந்தயம் போன்ற விளையாட்டுகளும் கைவிடப்பட்டுள்ளன.
ஆரம்பத்தில், ஆஸ்திரேலியாவின் விக்டோரியா நகர் காமன்வெல்த் போட்டிகளை நடத்துவதற்கான உரிமையைக் கொண்டிருந்தது. ஆனால் நிதி நெருக்கடி காரணமாக, போட்டியை நடத்துவதில் இருந்து கடந்த ஆண்டு விலகியது. இதனையடுத்து, கிளாஸ்கோ நகர் விளையாட்டு விளையாட்டுகளை நடத்த முன்வந்தது.
இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் செயல்திறன் வரலாற்று ரீதியாக வலுவாக உள்ளது, பெரும்பாலும் இப்போது நீக்கப்பட்ட விளையாட்டுகளில் அதிகம் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக ஹாக்கி, பேட்மிண்டன், துப்பாக்கி சுடுதல் மற்றும் மல்யுத்தம் ஆகியவற்றில் இந்தியா கணிசமான எண்ணிக்கையிலான பதக்கங்களை வென்றுள்ளது.
தளவாடக் காரணங்களால் பர்மிங்காம் 2022 பதிப்பில் இருந்து வெளியேறிய துப்பாக்கி சுடுதல் போட்டியை விலக்கியது குறிப்பாக பாதிப்பை ஏற்படுத்துகிறது. துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியா 63 தங்கம் உட்பட 135 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. இதேபோல், மல்யுத்தம் போட்டியின் பல்வேறு பிரிவுகளில் 114 பதக்கங்களுடன் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்த காமன்வெல்த் போட்டியில் இருந்து ஹாக்கியை விலக்கியது மற்றொரு பின்னடைவாக இந்தியாவுக்கு அமைந்துள்ளது. ஹாக்கியில் இந்திய ஆடவர் அணி மூன்று வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ள நிலையில், 2002 ஆம் ஆண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கம் உட்பட மூன்று பதக்கங்களுடன் பெண்கள் அணியும் பிரகாசித்துள்ளது. பல ஆண்டுகளாக 31 பதக்கங்களை (10 தங்கம், 8 வெள்ளி, 13 வெண்கலம்) வென்று இந்தியா பல பட்டங்களைத் தக்கவைத்துக் கொள்ளும் வகையில் அமைந்திருந்த பேட்மிண்டனும் இடம்பெறவில்லை.
2022 ஆம் ஆண்டில் இந்திய பெண்கள் அணி வெள்ளியுடன் திரும்பிய விளையாட்டான கிரிக்கெட் போட்டியும் இந்தப் பட்டியலில் இல்லை. இதேபோல், தற்போது இந்திய அணி ஜொலித்து வரும் ஸ்குவாஷ் மற்றும் டேபிள் டென்னிஸ் ஆகிய இரண்டு போட்டிகளும் இடம் பெறவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“