இந்திய - தென் ஆப்ரிக்கா அணிகளுடனான டி20 போட்டியின் போது, ஒரே நேரத்தில் இரண்டு இந்திய வீரர்கள் பேட்டிங் செய்ய களமிறங்கிய சம்பவம், சமூகவலைதளங்களில் நெட்டிசன்களின் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்திய - தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையயான மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி, பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர் ரோகித் சர்மா 9 ரன்களில் ஆட்டமிழந்தார். கோலி ஒன் டவுனாக இறங்கினார். ஷிகர் தவான் 36 ரன்களில் அவுட் ஆனார். 4ம் இடத்தில் விளையாட ரிஷப் பண்ட்டும், ஸ்ரேயாஸ் ஐயரும் ஒரேநேரத்தில் களமிறங்க, களத்தில் 3 பேட்ஸ்மேன்கள் இருந்த நிலை உருவானது. இதனையடுத்து அங்கு சிறுகுழப்பம் நிலவியது. பின் பண்ட் களமிறங்கினார். பண்ட் மற்றும் ஐயர், சொற்ப ரன்களிலேயே அவுட் ஆயினர்.
இந்த போட்டியில், தென் ஆப்ரிக்கா அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி20 தொடரை 1-1 என்ற சமநிலையை அடைய செய்தது.
போட்டிக்கு பிறகு, பத்திரிகையாளர்களை சந்தித்த இந்திய அணியின் கேப்டன் கோலி கூறியதாவது, சரியான தகவல்தொடர்பு இல்லாமையே, களத்தில் ஒரே நேரத்தில் 3 பேட்ஸ்மேன்கள் இருக்க காரணமாக அமைந்துவிட்டது. விக்கெட்கள் 10 ஓவர்களுக்கு மேல் தாக்கு பிடித்தால், ரிஷப் பண்ட், 4ம் இடத்தில் விளையாட வைப்பதாகவும் அதற்கு முன்பே விக்கெட்கள் விழுந்துவிட்டால், ஸ்ரேயாஸ் ஐயரை அந்த இடத்தில் களமிறக்க வைப்பதாக திட்டமிடப்பட்டது. ஆனால், விக்கெட்கள் அடுத்தடுத்து சரிந்த நிலையில், என்ன செய்வது என்று தெரியாமல் இருவரும் ஒரே நேரத்தி்ல் களம் இறங்கிவிட்டதாக கோலி கூறினார்.