CRCKET Tamil News: இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி தற்போது 3 போட்டிகள் டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், கடந்த புதன் கிழமை கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த முதலாவது போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால், இந்திய அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
இந்நிலையில், நேற்று மாலை நடந்த 2வது டி20 போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் திரில் பெற்றது. இந்த அசத்தலான வெற்றி மூலம் தொடரை கைப்பற்றியுள்ள இந்தியா, தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. மேலும், நாளை நடைபெறும் மூன்றாவது டி20 போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.
பண்ட் - கோலிக்கு ஓய்வு
இந்நிலையில், நேற்று நடந்த 2வது டி20 போட்டியில் அரைசதம் அடித்து அசத்திய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மற்றும் விக்கெட் கீப்பர் வீரர் ரிஷப் பண்ட் ஆகிய இருவரும் நாளை நடைபெறும் 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில் பங்கேற்க மாட்டார்கள் என்றும், இலங்கை அணிக்கு எதிராக நடைபெற உள்ள டி20 கிரிக்கெட் தொடரிலும் அவர்கள் இருவரும் விளையாட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு வீரர்களுக்கும் பயோ பபிள் தனிமைப்படுத்தல் நடைமுறையிலிருந்து விடுப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பிசிசிஐ, இருவரும் தொடர்ச்சியாக போட்டிகளில் விளையாடி வருவதை கருத்திற் கொண்டும், இருவருக்கும் ஓய்வு அளிக்கும் பொருட்டும் இந்த விடுப்பு வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரில் கேஎல் ராகுல் இல்லாததால் துணை கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டார். நேற்றை ஆட்டத்தில் மிகச்சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய அவர் 28 பந்துகளில் 1 சிக்ஸர் 7 பவுண்டரிகளுடன் தனது அரைசத்தை பதிவு செய்தார். மேலும் ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
இதேபோல், பாகிஸ்தானுக்கு எதிரான டி 20 உலகக் கோப்பை போட்டியில் அரைசதம் அடித்த விராட் கோலி, நீண்ட இடைவெளிக்கு பிறகு நேற்றை ஆட்டத்தில் அதை மீண்டும் பதிவு செய்தார். அவர் 41 பந்துகளில் 1 சிக்ஸர் 7 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் சேர்த்து இருந்தார்.
இலங்கை - இந்தியா அட்டவணை
இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடர் வருகிற பிப்ரவரி 24ம் தேதி அன்று லக்னோவில் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து பிப்ரவரி 26 மற்றும் 27 தேதிகளில் 2வது மற்றும் 3வது போட்டிகள் தர்மசாலாவில் நடக்கிறது. மேலும், அந்த அணி பங்கேற்கும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி மார்ச் 4ம் தேதி முதல் 8ம் தேதி வரை மொஹாலியிலும், 2வது போட்டி மார்ச் 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை பெங்களூரிலும் நடக்கிறது.
100வது டெஸ்டில் விராட் கோலி
வெஸ்ட் அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டி 20 போட்டியில் இருந்தும், இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இருந்து ஓய்வு வழங்கப்பட்டுள்ள ரிஷப் பண்ட் மற்றும் விராட் கோலி மொஹாலியில் நடக்கும் முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார்கள் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. இவர்களுடன் மயங்க் அகர்வால், ஆர் அஷ்வின், ஹனுமா விஹாரி போன்ற வீரர்களும் இந்திய டெஸ்ட் அணியில் இணைவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.
"ரிஷப் பண்ட் மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் தொடக்கத்தில் இருந்து பெரும்பாலான ஆட்டங்களில் சேர்த்து விளையாடியுள்ளனர். மொஹாலியில் நடைபெறும் போட்டி கோலியின் மைல்கல்லாக இருக்கும் 100வது டெஸ்டாகும். மேலும் இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் அவர் ஃபிட்டாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்." என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான சுற்றுப்பயணத்தின் தொடக்கத்திலிருந்து கோலி இதுவரை இரண்டு டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் இரண்டு டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார். முதுகு வலி காரணமாக அவர் ஒரு டெஸ்ட் போட்டியை தவறவிட்டார். மேலும், தென்ஆப்பிரிக்காவில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியிலிருந்து அனைத்து ஆட்டங்களிலும் அவர் விளையாடி வருகிறார்.
இதேபோல் பண்ட் 3 டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் 2 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும், டிசம்பர் தொடக்கத்தில் நியூசிலாந்துக்கு எதிரான தனது இரண்டு-டெஸ்ட் இடைவேளைக்குப் பிறகு தொடர்ந்து விளையாடியும் உள்ளார். இதனால் அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), மயங்க் அகர்வால், பிரியங்க் பஞ்சால், விராட் கோலி, ஷ்ரேயாஸ், ஹனுமா விஹாரி, ஷுப்மன் கில், ரிஷப் பந்த், கே.எஸ். பாரத், அஷ்வின் (உடற்தகுதி பொறுத்து), ரவி ஜடேஜா, ஜெயந்த் யாதவ், குல்தீப், பும்ரா (துணைக்கேப்டன் ), ஷமி, சிராஜ் , உமேஷ் யாதவ், சௌரப் குமார்.
இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), ருதுராஜ், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யா குமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், தீபக் சாஹர், பும்ரா (துணைக்கேப்டன்), புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், ஹர்ஷல், சிராஜ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரவி ஜடேஜா, சாஹல், ரவி பிஷ்னோய், குல்தீப் , அவேஷ் கான்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.