இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா இடையே முத்தரப்பு தொடர் நடத்த ஆர்வமுடன் இருப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகி நிக் ஹாக்லே பேசுகையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாகவும், 3 அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு தொடரை நடத்த தாங்கள் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"பாகிஸ்தானும் இந்தியாவும் பாரம்பரியமாக பரம போட்டியாளர்களாக உள்ள அணிகள். அவர்களின் போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும், உற்சாகமும் உள்ளது. இருதரப்பு மற்றும் முத்தரப்பு தொடருக்கு இரு அணிகளுக்கும் ஆதரவளிக்க நாங்கள் தயாராக உள்ளோம். பாகிஸ்தான்-இந்தியா இருதரப்பு தொடரின் மறுமலர்ச்சியில் பங்களிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைவோம்.
இதுபற்றி இரண்டு அணிகளின் வாரியங்களும் முதலில் முடிவு செய்ய வேண்டும். போட்டியை நடத்துவதில் நாங்கள் அவர்களுக்கு உதவுவோம். சம்பந்தப்பட்ட கிரிக்கெட் வாரியங்களின் பிஸியான கால அட்டவணைகள், இன்னும் முறையான விவாதங்கள் நடைபெறாமல் தடுக்கின்றன." என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகி நிக் ஹாக்லே கூறியுள்ளார்.
2012-13 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இருதரப்பு தொடர்கள் எதுவும் நடைபெறவில்லை. இரு அணிகளும் ஐ.சி.சி நடத்தும் போட்டிகளில் மட்டுமே நேருக்கு நேர் சந்தித்து வருகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“