ICC World Test Championship Final, india vs Australia Tamil News: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பாா்டா் – காவஸ்கா் டெஸ்ட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இந்த தொடரில் நாக்பூரில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இதைத்தொடர்ந்து, டெல்லியில் நடந்த 2-வது டெஸ்டில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. இந்த தொடர் வெற்றிகள் மூலம் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்தூர் டெஸ்ட் – ஆஸி,. வெற்றி
இந்நிலையில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கடந்த புதன்கிழமை (மார்ச் 1ம் தேதி) தொடங்கியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 109 ரன்னில் சுருண்டது. தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 76.3 ஓவர்களில் 197 ரன்னில் எடுத்தது.
பின்னர், 88 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய இந்தியா மீண்டும் சொதப்பியது. முடிவில் இந்திய அணி 2-வது இன்னிங்சில் 60.3 ஓவர்களில் 163 ரன்களுக்கு ஆட்டமிழந்து மொத்தம் 75 ரன்கள் முன்னிலை பெற்றது. இதனையடுத்து, 76 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணி இந்த எளிய இலக்கை ஒரு விக்கெட் இழப்புடன் எட்டிப்பிடித்தது. இதனால், அந்த அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. மேலும், இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் நீடிக்கிறது.

இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா; இந்தியாவுக்கு புதிய நெருக்கடி
மூன்றாவது டெஸ்டில் இந்தியாவை 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா, இந்த ஆண்டு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அந்த அணி தற்போது ஐசிசி தரவரிசைப் பட்டியலில் 126 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்தியா 115 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது.
இந்தியா இறுதிக்கு முன்னேற, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடக்கும் 4வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும். அந்த போட்டியில் ஒருவேளை இந்திய அணி தோல்வி அடைந்தால் , நியூசிலாந்து – இலங்கை அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் முடிவை பொறுத்து இந்தியாவின் வாய்ப்பு அமையும் .

அதாவது, நியூசிலாந்து மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் இலங்கை அணி நியூசிலாந்தை 2-0 என்று வெற்றி பெற்றால் கூட, இந்தியா அகமதாபாத் டெஸ்ட்டில் வெற்றி பெற்றால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விடும்.
இலங்கை அணி நியூசிலாந்தில் 2-0 என்று வெற்றி பெறவில்லை என்றால், இந்தியா அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் வென்றாலும் வெல்லா விட்டாலும் தகுதி பெற்று விடும். இந்தியா – ஆஸ்திரேலியா 4வது டெஸ்ட் போட்டியும் இலங்கை, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியும் மார்ச் 9ம் தேதிதான் தொடங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil