ஆசைத்தம்பி
ஐசிசி தனது நீண்டநாள் கனவான டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் லீக் ஆகியவற்றிற்கான திட்டத்தை வெளியிட்டுள்ளது.
சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் லீக் தொடர்களை நடத்துவதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஒப்புதல் அளித்தது. சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி மட்டும் இருந்த நேரத்தில், டி20 வருகை ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, ஐபிஎல் வருகைக்கு பின்னர் பெரும்பாலான கிரிக்கெட் பிரியர்கள் 3 மணி நேரத்தில் கிரிக்கெட் முடித்து அடுத்த வேலையை பார்க்க சென்றுவிட்டனர்.
நாள் முழுவதும் நடக்கும் டெஸ்ட் போட்டிகள், எட்டு மணி நேரம் நடக்கும் ஒருநாள் போட்டியைக் கூட அதிகம் பார்க்க விரும்புவதில்லை. இதனால், டெஸ்ட் போட்டிகளின் மீது ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆலோசனை மேற்கொண்டு வந்தது. இதற்காக, சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் போட்டி லீக் ஆகியவற்றை நடத்த ஆலோசிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்தில் நடைபெற்ற கூட்டத்தில், உலகக் டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் லீக் ஆகிவற்றை நடத்துவதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்லில் ஒப்புதல் வழங்கியது. இந்த ஒப்புதலுக்கு பிறகு, டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் லீக் ஆகியவற்றிற்கான திட்டத்தை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி, இங்கிலாந்தில் 2019-ம் ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பின்னர் இந்த, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்கவுள்ளது. ஜுலை 15 2019 முதல் ஏப்ரல் 30 2021 வரை இரண்டு ஆண்டு காலக் கட்டத்தில் நடைபெறவுள்ள இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில், தரவரிசையில் டாப்-9 இடத்தில் உள்ள அணிகள் பங்கேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணிகள் உள்நாட்டில் 3 தொடர் மற்றும் வெளிநாட்டில் 3 தொடர் என மொத்தம் 6 தொடர்களில் பங்கேற்கும். பின்னர், டாப் 2 அணிகள் 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும் இறுதிப்போட்டியில் பங்கேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த இறுதிப் போட்டியை எங்கு நடத்துவது என்பது குறித்து ஐசிசி இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. லார்ட்ஸ் மைதானத்தில் நடத்தப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கலாம் என தெரிகிறது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில், இந்திய அணி தனது முதல் போட்டியை வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 2019ல் விளையாட உள்ளது. வெஸ்ட் இண்டீசில் தான் இந்தப் போட்டி நடைபெற உள்ளது.
ஐசிசி ஒருநாள் லீக்கில் தற்போது தரவரிசையில் இருக்கும் 13 அணிகளுடன், உலகக்கோப்பை லீக் சாம்பியன்ஷிப் தொடரில் வெற்றிபெற்ற நெதர்லாந்து அணியும் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு தொடரில் மூன்று போட்டிகள் கொண்டதாக இருக்கும். இந்த லீக் 2020 முதல் 2022 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாத் தொடர்களும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் லீக் தொடருக்குள் வராது என்று ஐசிசி தெரிவித்துள்ளது. இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் இதில் எடுத்துக்கொள்ளமாட்டாது என்று ஐசிசி தெளிவுப்படுத்தியுள்ளது. இதில் ஒவ்வொரு அணியும் தலா 8 ஒருநாள் தொடரில் விளையாட வேண்டும். இப்போட்டி தொடரானது 2023-ம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெறுவதற்கான தொடராக கருதப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஐசிசி-யின் இந்த அறிவிப்புக்கு பிறகு கிரிக்கெட் வல்லுனர்களிடையே ஒரு சந்தேகம் எழுந்துள்ளது. அதாவது, இந்த டாஸ் போடும் முறையை முடிவுக்கு கொண்டுவரலாமா என்பது குறித்து ஐசிசி தீவிரமாக ஆலோசித்து வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து, டெஸ்ட் போட்டிகளில் இருந்து டாஸ் போடும் முறையை நீக்கலாம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
டெஸ்ட் தொடர்களின் போது, உள்ளூர் அணி, தங்களுக்கு ஏற்றவாறு தான் பெரும்பாலும் பிட்சை அமைத்துக் கொள்ளும். ஆசிய கண்டத்தின் அணிகள் சுழற்பந்து வீச்சுக்கு ஏற்றவாறும், இதர வெளிநாட்டு அணிகள் தாறுமாறாக எகிறும் வேகப்பந்து வீச்சுக்கு ஏற்றவாறு பிட்சை வடிவமைத்துக் கொள்ளும். இதனால், எப்பேற்பட்ட பலம் வாய்ந்த அணியாக இருந்தாலும், வெளிநாட்டுத் டெஸ்ட் தொடர்களில் தடுமாறும் நிலை ஏற்படுகிறது. அப்படி, ஒன்-சைட் கேமாக ஆட்டம் அமையக் கூடாது என்பதற்காகவே, டாஸ் போடும் முறையை நீக்க ஐசிசி ஆலோசித்து வருகிறது.
அப்படி ஒருவேளை டாஸ் முறை நீக்கப்பட்டால், சுற்றுப்பயணம் செய்துள்ள அணியின் கேப்டன் தான் தங்கள் அணி பேட்டிங் அல்லது பவுலிங் தேர்வு செய்யப் போகிறதா என்று முடிவு செய்ய வேண்டும். உள்ளூர் அணி கேப்டன் அவ்வாறு முடிவு எடுக்க முடியாது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் லீக் தொடருக்கான FTP வெளியிட்டிருக்கும் ஐசிசி, டாஸ் விவகாரம் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. சாதாரண டெஸ்ட் தொடரிலேயே உள்ளூர் அணிக்கு தங்களுக்கு ஏற்றவாறு பிட்சை தகவமைத்துக் கொள்ளும் சூழ்நிலையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்றால், அது மற்ற நாடுகளுக்கு சென்று ஆடும் அணிகளுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாதா? என்ற கேள்வியை எழுப்புகிறது.
இருப்பினும், டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்குள் டாஸ் போடும் முறையை கொண்டுவந்து விட வேண்டும் என்பதில் ஐசிசி மிகத் தீவிரமாக உள்ளது என்பதே நமக்கு கிடைத்திருக்கும் தகவல்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.