India vs Australia 3rd ODI, Chennai pitch REPORT Tamil News: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் மும்பையில் நடந்த ஆட்டத்தில் இந்தியாவும், விசாகப்பட்டினத்தில் நடந்த 2வது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால், தொடர் 1-1என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது.
இந்த நிலையில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை புதன்கிழமை (மார்ச் 22ம் தேதி) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் அரங்கேறுகிறது. இப்போட்டியைக் கைப்பற்றும் அணி தொடரை வெல்லும் என்பதால், இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
சேப்பாக்கம் பிட்ச் ரிப்போர்ட்
பொதுவாக, சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு அனுகூலமாக இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக, இந்த மைதானத்தின் ஆடுகளம் மெதுவாகவே உள்ளது. அதனால், சுழற்பந்து வீச்சாளர்கள் இங்கு அதிகம் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். போட்டி தொடர்ந்து நடக்கும் போது ஏற்கனவே வறண்டு இருக்கும் பிட்ச் கூடுதலாக மெதுவாகிறது. இது வெற்றி இலக்கை துரத்தும் அணிக்கு கடும் சவால் கொடுக்கும்.
முதல் இன்னிங்ஸின் போது, பேட்டிங் ஒப்பீட்டளவில் எளிதாக இருக்கும். பேட்ஸ்மேன்கள் பவுன்சர்களை இறங்கி சென்று விளாசி ஷாட்களை ஆடலாம். வேகப்பந்து வீச்சாளர்கள் பந்துவீசுவதற்கு இது ஒரு நல்ல நேரமாக இருக்கும். ஆனால், அவர்கள் பந்துவீச்சில் தொடர்ந்து மாறுபாடுகளை காட்ட வேண்டும். இல்லையென்றால், அதிரடி பேட்ஸ்மேன்கள் நொறுக்கி அள்ளி விடுவார்கள். இந்த மைதானத்தில் முழுமையாக நடந்த 21 ஒருநாள் போட்டிகளின் சராசரி ஸ்கோர் 259 ஆக உள்ளது.
இருப்பினும், இந்த மைதானத்தில் இந்தியா விளையாடிய கடைசி போட்டியில் அணிக்கு அதிர்ச்சி தோல்வி தான் மிஞ்சியது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 15 அன்று நடந்த போட்டியில் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 287 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் ஷ்ரேயாஸ் 70 ரன்களும், ரிஷப் பண்ட் 74 ரன்களும் எடுத்தனர்.
தொடர்ந்து 288 ரன்கள் என்ற சவாலான ஸ்கோரை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் இந்தியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர். தொடக்க வீரர் ஷாய் ஹோப் (102 ரன்கள்), மற்றும் ஷிம்ரோன் ஹெட்மியர் (139 ரன்கள், 7 சிக்ஸர்கள் உட்பட) சென்னை மண்ணில் ரன் மழை பொழிந்தனர். மேலும், வெஸ்ட் இண்டீஸ் 13 பந்துகள் மீதம் வைத்த நிலையில் வெற்றி இலக்கை எட்டவும் உதவினர். இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தின் 2வது இன்னிங்சில் ஆடுகளம் மெதுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விளக்குகளின் கீழ் ஆடுகளம் விரைவாக மாறியது. அது வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பந்துகளை பறக்க விட உதவியது. ஆடுகள கணிப்பு சொந்த அணிக்கே வினையாக மாறியதால், கேப்டன் விராட் கோலி சோகத்தில் ஆழ்ந்து போனார்.
சேப்பாக்கம் மைதானத்தில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களை குவித்த வீரராக பாகிஸ்தானின் சயீத் அன்வர் (194) இருந்தார். ஆனால், அவரது சாதனையை இந்திய ஜாம்பவான் வீரரான சச்சின் டெண்டுல்கர் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 200 ரன்களை குவித்து அந்த சாதனையை முறியடித்தார். தற்போது இந்த சாதனையை நாளைய போட்டியில் யார் முறியடிப்பார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil