India's best ODI batting line-up should be in the World Cup year Tamil News
Indian Team for 2023 ODI World Cup Tamil News: இந்திய மண்ணில் இந்த ஆண்டு அக்டோபர்-நவம்பரில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பையை ஒட்டி இந்தியா தொடர்ச்சியாக ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி இலங்கை, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று ஒருநாள் தொடர்களில் மார்ச் மாதத்திற்குள், அதாவது ஐ.பி.எல் தொடர் தொடங்குவதற்குள் விளைடுகிறது.
Advertisment
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் வென்றது. இதனைத்தொடர்ந்து நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான தொடரையும் இந்தியா கைப்பற்றியுள்ளது. காயம் காரணமாக சில முக்கிய வீரர்கள் ஆக்ஷனில் இல்லாத போதிலும், வீரர்கள் தங்கள் ஃபார்மை மீண்டும் பெற்று, நிலையான மற்றும் வித்தியாசமான ஆட்டத்தை நாம் பார்த்து வருகிறோம்.
இந்நிலையில், உலகக் கோப்பை ஆண்டில் இந்தியாவின் சிறந்த ஒருநாள் பேட்டிங் வரிசை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
இந்தியாவின் தொடக்க வீரர்களுக்கான இடத்தை கேப்டன் ரோகித் சர்மாவுடன் சுப்மான் கில் தனக்கான இடத்தை உறுதிப்படுத்தியுள்ளார். இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது தொடக்க ஆட்டக்காரராக இஷான் கிஷானுக்கு முன்னதாக தேர்வு செய்யப்பட்ட கில், நிர்வாகத்தின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக கில், இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் ஆட்டங்களில் சதம் உட்பட 207 ரன்கள் குவித்தார்.
பின்னர் நியூசிலாந்துக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் இரட்டை சதம் அடித்து மிரட்டினார். கில்லின் நிலைத்தன்மையும், அவரின் பவர் பிளேயில் அட்டாக் செய்து விளையாடும் ஆட்டமும் மூத்த வீரர் ஷிகர் தவான் மீண்டும் களமிறங்குவதற்கான கதவை மூடிவிட்டது என்றே கூறலாம்.
முன்னணி வீரர்களில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரும் தங்கள் ஃபார்மை மீட்டெடுத்து ஸ்கோர்போர்டில் ரன்களை உயர்த்தி வருகிறார்கள். இலங்கை, நியூசிலாந்துக்கு எதிரான போட்டிகளில் அவர்கள் தங்களுக்கே உரித்தான ஒருநாள் பாணியில் விளையாடி வருகின்றனர். கேப்டன் ரோகித் இரண்டு அரைசதத்திற்கு மேல் அடித்துள்ளார். அதேவேளையில் கோலி இரண்டு சதங்களை அடித்துள்ளார்.
அடுத்த வரிசையில் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் இல்லாத நிலையில் கே.எல்.ராகுலுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ராகுலின் ஆட்டமிழக்கும் முறை பெரும்பாலும் விவாதத்திற்குரிய விஷயமாக இருந்தாலும், அவரது விவேகமான பேட்டிங் அணிக்கு மீண்டும் மீண்டும் உதவியிருக்கிறது. 5வது இடத்தில், சூர்யகுமார் யாதவ் அல்லது ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடுவார்கள். நிர்வாகம் அவர்களை உரிய நேரத்தில் மற்றும் சரியான அணிக்கு எதிரான அடிப்படையில் சுழற்ற வேண்டும்.
காயம் அடைந்த ரவீந்திர ஜடேஜா இல்லாதது அக்சர் படேலுக்கு ஆசீர்வாதமாக அமைத்துள்ளது. அவருக்கு கிடைத்த வாய்ப்புகளை அதிகம் பயன்படுத்தியுள்ளார். படேலின் ஆல்ரவுண்ட் திறமை இந்தியாவுக்கு சில பயனுள்ள ரன்களைச் சேர்க்க உதவியுள்ளது மற்றும் மிகவும் தேவையான முன்னேற்றத்தைப் பெற உதவி இருக்கிறது. அவர் ஃபார்ம் அவுட் ஆகி வெளியேறும் வரை ஆடும் லெவனில் அவர் முக்கிய வீரராக இருப்பார்.
அக்சர் பட்டேல் மற்றும் ஹர்திக் பாண்டிய ஆகியோர் வரிசையில் இருப்பதால், நிர்வாகம் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஜடேஜா (அவரது உடற்தகுதி மற்றும் அணியில் சேர்க்கப்பட்டால்) யாரையாவது தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். சைனாமேன் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவின் கடின உழைப்பை இனி கவனிக்காமல் இருக்க முடியாது. ஏனெனில், அவர் கேப்டன் ரோகித்துக்கு விக்கெட் வீழ்த்தும் விருப்பமாக மாறிவிட்டார்.
முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா (தகுதியுடன் அணியில் சேர்க்கப்பட்டால்), முகமது ஷமி மற்றும் உம்ரான் மாலிக் ஆகிய வீரர்களில் இரு வேகப்பந்து வீச்சாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் கடினமான அழைப்பை எடுக்கும் நிலை வரும். பும்ரா மற்றும் ஷமி ஆகியோர் அணியின் சொத்து என நிரூபிக்கப்பட்டாலும், சிராஜ் மற்றும் மாலிக் ஆகியோர் குறைந்த வாய்ப்புகளில் தங்களை நிரூபித்துள்ளனர் என்பது இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.
இந்தியாவின் சிறந்த ஒருநாள் வரிசை:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ் அல்லது ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர் அல்லது ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ் அல்லது ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி அல்லது உம்ரான் மாலிக்.