KL Rahul Test vice-captain, Rohit Sharma Tamil News: இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தற்போது பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நாக்பூரில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இதைத் தொடர்ந்து டெல்லியில் நடந்த 2-வது டெஸ்டில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. இந்த தொடர் வெற்றிகள் மூலம் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தூர் மற்றும் அகமதாபாத்தில் நடைபெறவுள்ள மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான துணை கேப்டனை முடிவு செய்யும் பொறுப்பை இந்திய கேப்டன் ரோகித் சர்மாவிடம் ஒப்படைத்துள்ளது. அதாவது கேஎல் ராகுல் இனி துணை கேப்டான செயல்பட வாய்ப்பில்லை.

கடந்த டிசம்பரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான அணி அறிவிக்கப்பட்டநிலையில், அப்போது அணியின் துணை கேப்டனாக ராகுல் நியமிக்கப்பட்டார். இருப்பினும், ஃபார்மில் இல்லாத அவரின் பணிச் சுமையை குறைக்க தேர்வாளர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் ஒரு அதிகாரி பேசுகையில், “துணை கேப்டன் என யாரையும் குறிப்பிட வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது. மாறாக, அதற்கான அதிகாரம் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் களத்தை விட்டு வெளியேறினால் யார் அணியை வழிநடத்துவது என்பது ரோகித் சர்மாவின் அழைப்பு” என்று கூறியுள்ளார்.
மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிகளுக்கான அணியை தேர்வு செய்வதற்காக, கொல்கத்தாவில் ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த மூத்த தேர்வுக் குழு உறுப்பினர்கள் டெல்லிக்கு பறந்தனர். ஸ்டிங் ஆபரேஷனுக்குப் பிறகு தேர்வாளர்களின் தலைவர் சேத்தன் ஷர்மா ராஜினாமா செய்ததை அடுத்து, கூட்டத்திற்கு முன்னாள் இந்திய தொடக்க வீரர் எஸ்எஸ் தாஸ் தலைமை தாங்கினார்.

தொடக்க வீரர் ராகுலின் ஃபார்ம் மற்றும் 23 வயதான ஷுப்மான் கில்லின் காத்திருப்பு முக்கிய பேச்சுப் புள்ளியாக இருந்தது. இருப்பினும், போட்டிக்கு பிந்தைய கருத்துகளின் மூலம் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் ஆதரவை ராகுல் பெற்றுள்ளார்.
டெஸ்ட் தொடரின் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பாளரிடம் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசுகையில், “அவர் தனது செயல்முறைகளை நம்ப வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இது ஒரு கட்டம் மட்டுமே, அவர் எங்களின் வெற்றிகரமான வெளிநாட்டு தொடக்க வீரர்களில் ஒருவராக இருந்து வருகிறார். அவர் தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்தில் சதங்களை விளாசியுள்ளார். நாங்கள் அவரை தொடர்ந்து ஆதரிப்போம்.”என்று கூறியிருந்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது மற்றும் 4வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல்:
ரோகித் ஷர்மா (கேப்டன்), கே எல் ராகுல், ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, கேஎஸ் பாரத் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது. ஷமி, முகமது. சிராஜ், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட்.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி இந்தூரில் ஹோல்கர் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் வருகிற மார்ச் 1 ஆம் தேதி நடக்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil