IPL 2023 to introduce Impact Player rule Tamil News: 16வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் திருவிழா வருகிற 31-ந் தேதி முதல் கோலாகலமாக தொடங்குகிறது. இந்த தொடரில் 10 அணிகளைச் சேர்ந்த வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அகமதாபாத் மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில், நடப்பு ஐ.பி.எல் தொடரில் இருந்து புதிய விதிகள் அமலுக்கு வருகிறது. இந்த விதிகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 2023 ஐபிஎல் சீசனில் அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, உள்நாட்டுப் போட்டிகளில் ‘இம்பாக்ட் பிளேயர்’ விதியை முயற்சித்தது. அதே நேரத்தில், மகளிர் பிரீமியர் லீக் (WPL) தொடரில் முடிவு மறுஆய்வு முறையின் (DRS) கீழ் நடுவர்களால் கொடுக்கப்படும் ஒயிடு மற்றும் நோ-பால் அழைப்புகளை அணிகள் மேல்முறையீடு (அப்பீல்) செய்ய அனுமதிக்கப்பட்டன. ஏற்கனவே தென்ஆப்பிரிக்காவில் நடந்த எஸ்.ஏ. 20 ஓவர் கிரிக்கெட்டிலும் இந்த நடைமுறை பயன்படுத்தப்பட்டது என்பதும் இங்கு நினைவுகூரத்தக்கது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ‘டாஸ்’ போடுவதற்கு இரு அணி கேப்டன்களும் மைதானத்திற்கு வரும் போது, பேப்பரில் எழுதிக் கொண்டு வரும் களம் காணும் 11 வீரர்களின் பெயர் பட்டியலை பரிமாறிக்கொள்வது வழக்கம். அதன் பிறகு தான் டாஸ் போடப்படும். இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது.
இதன்படி, இனி ‘டாஸ்’ போட்ட பிறகு ஆடும் 11 வீரர்களின் பட்டியலை வழங்கினால் போதும். இதன் மூலம் முதலில் பேட்டிங்கோ அல்லது பந்து வீச்சோ அதற்கு ஏற்ப சிறந்த லெவனை தேர்வு செய்ய முடியும். அத்துடன் தாக்கத்தை ஏற்படுத்தும் சரியான வீரரை (இம்பாக்ட் பிளேயர்) தேர்வு செய்வதற்கும் இது உதவிகரமாக இருக்கும். மேலும், ஒவ்வொரு கேப்டனும் 11 வீரர்களுடன் அதிகபட்சமாக 5 மாற்று பீல்டர்களின் பெயர்களையும் குறிப்பிட வேண்டும்.
“(i) அணிகள் முதலில் பேட்டிங் செய்தாலோ அல்லது பந்துவீசினாலோ ஆடும் 11 வீரர்கள் மற்றும் 5 மாற்று பீல்டர்கள் அல்லது துணை வீரர்களின் பெயர்களை குறிப்பிட வேண்டும்.
(ii) விளையாடும் 11 மற்றும் 5 துணை வீரர்கள் பெயர்களை முதலில் பந்துவீசினால் அல்லது முதலில் பேட்டிங் செய்தால் டீம் ஷீட்டில் உள்ள பேட்டிங் ஃபர்ஸ்ட் பாக்ஸில் டிக் செய்யவும். டாஸின் முடிவைப் பொறுத்து, கேப்டன்கள் அதற்கேற்ப அணியின் பேப்பர்களை மாற்றிக் கொள்ளலாம்.
போட்டியின் போது ‘இம்பாக்ட் பிளேயரை’ அறிமுகப்படுத்த நடுவர் இனி புதிய சிக்கினல் கொடுப்பார். அவர்கள் தங்களின் இரண்டு கைகளையும் தங்களது தலைக்கு மேல் குறுக்காக வைப்பார்கள். இடது கையின் உள்ளங்கை முடியவாறும், வலது கையின் உள்ளங்கையை திறந்தவாறும் வைத்திருப்பார்கள்.
பிசிசிஐ போட்டி நாட்களில் விளையாடும் அணி வீரர்களின் எண்ணிக்கையை 16 ஆகவும் உயர்த்தியுள்ளது. அணிகள் இம்பாக்ட் பிளேயரை சிறந்த முறையில் பயன்படுத்துவதற்கும், மூளையதிர்ச்சி மாற்றீடு (தேவைப்பட்டால்) மற்றும் பீல்டிங் மாற்று வீரர்களைக் கணக்கிடுவதற்கும் இது உதவியாக இருக்கும்.
“தற்போது, பிளேயர் ரிவியூ அவுட் மற்றும் நாட் அவுட் முடிவுகளுக்கு மட்டுமே இருந்த நிலையில், இப்போது வைடுகளையும் நோ பால்களையும் அப்பீல் செய்ய இதைப் பயன்படுத்தலாம். ஒவ்வொரு அணிக்கும் இன்னிங்சில் 2 பிளேயர் ரிவியூ கிடைக்கும்.” என்று கூறப்பட்டுள்ளது.
மற்ற மாற்றங்களில், அணிகள் குறிப்பிட்ட நேரத்தில் தங்கள் ஓவர்களை வீசாவிட்டால் அபராதம் விதிக்கப்படும். ஃபீல்டிங் அணியானது, ஓவர்கள் கடந்து செல்வதில் தாமதமாக இருந்தால், வழக்கமான 5 பீல்டர்களுக்குப் பதிலாக, 30 யார்டுகளுக்கு வெளியே 4 பீல்டர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையின் போது இந்த விதி அமலில் இருந்தது.
பீல்டர்களின் ‘நியாயமற்ற’ அசைவு நடுவரால் ‘டெட் பால்’ அழைப்புக்கு வழிவகுக்கும் என்றும் பீல்டிங் அணிக்கு 5 அபராத ரன்கள் விதிக்கப்படும் என்றும் பிசிசிஐ முடிவு செய்துள்ளது. ஸ்ட்ரைக்கரை ஆடுகளத்தை விட்டு வெளியேறச் செய்யும் எந்தப் பந்தும் நோ-பால் என்று கருதப்படும், அதைத் தொடர்ந்து டெட் பந்தாகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil