Cricket news in tamil: இந்தியாவில் நீடித்த கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியில் களம் கண்ட தமிழக வீரர் நடராஜன், தனது அபாயகரமான யார்க்கர் பந்து வீச்சால் உலகின் பல முன்னணி வீரர்களின் ஸ்டம்புகளை பதம் பார்த்தார். இவரின் இந்த துல்லியமான பந்து வீச்சை கவனித்த இந்திய அணியின் தேர்வாளர்கள் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்திற்கான நெட் பவுலராக தேர்வு செய்தனர். இந்த பயணத்தின் போது இந்திய அணி சார்பாக களம் கண்ட இந்திய முன்னணி பந்து வீச்சாளர்கள் பலர் காயத்தால் அவதிப்பட்டனர். இதனால் அங்கு நடந்த 3 தர கிரிக்கெட் தொடர்களிலும் இவருக்கு இடம் கிடைத்தது.
அறிமுகமான 3 தர போட்டிகளிலும் தனது சிறப்பான பந்து வீச்சால் அனைவரது கவனத்தையும் ஈர்த்த நடராஜன் இந்தாண்டு நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இது குறித்து அப்போது பேசிய கேப்டன் விராட் கோலி, 'நடராஜன் நிச்சயம் டி20 உலக கோப்பையில் நிச்சயம் விளையாட தயாராவார்' என்று கூறியிருந்தார்.
ஆனால் அதன் பிறகு முழங்கால் காயம் காரணமாக அவதிப்பட்ட நடராஜன் பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகடமியில் சிகிச்சை பெற்றார். மீண்டும் இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடரில் களம் கண்ட அவர் ஆரம்ப கட்டத்தில் சில போட்டிகளில் பங்கேற்ற பின்னர் காயம் காரணமாக விலகினார்.
இந்நிலையில், காயத்திலிருந்து மீண்டுள்ள நடராஜன் எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது. இதில் அவரின் பந்து வீச்சு சிறப்பாக இருக்கும் பட்சத்தில் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தவிர, கிரிக்கெட் ரசிகர்களும் அவர் டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா, "நடராஜன் சிறந்த பந்துவீச்சாளர் தான் அதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. ஆனால் காயத்தால் அவர் கஷ்டப்படுவது மட்டும் தான் இங்கு பிரச்சனையே. அவருடைய ஆரம்ப காலத்தில் அவர் டென்னிஸ் பந்தில் விளையாடி விட்டு தற்போது கிரிக்கெட் பந்தில் விளையாடுவதால் அவருக்கு இது சற்று கடினமாக இருக்கும்.
ஆனாலும் நடராஜன் போட்டியின் இறுதி கட்டத்தில் சிறப்பாக வீசக்கூடிய ஒரு பந்து வீச்சாளர் அவரால் பவர்பிளே ஓவர்களில் பந்துவீச முடியுமா? என்பதில் சந்தேகம் தான். இருந்தாலும் இதை இரண்டையும் அவர் சிறப்பாக செய்யவேண்டும் என பிசிசிஐ எதிர்பார்க்கும். எனவே காயத்திலிருந்து அவர் மீண்டு எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக பந்துவீசினால் மட்டுமே அவருக்கு டி20 உலகக்கோப்பை அணியில் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.