Cricket news in tamil: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) முதன் முதலாக நடத்திய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்ட இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்த நிலையில், ஐசிசி நடத்தும் மற்றொரு முக்கிய தொடரான டி20 உலகக்கோப்பை தொடர் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற உள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) தலைவைர் சவுரவ் கங்குலி நேற்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இங்கிலாந்து மண்ணில் நடந்த முடிந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவி கவலையில் ஆழ்ந்துள்ள இந்திய அணிக்கு இது மற்றும்மொரு பொன்னான வாய்ப்பாக அமைத்துள்ளது. இதை கச்சிதமாக இந்திய அணி பயன்படுத்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இது ஒரு புறம் இருக்க, டெஸ்ட் தொடர்களில் இந்திய அணிக்காக சிறப்பாக பந்து வீசி வரும் வீரர் ஒருவரை, டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விளையாட வைக்க வேண்டும் என்ற கருத்தை இந்திய ரசிகர்கள் சிலர் சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து முன் வைத்து வருகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா, அந்த குறிப்பிட்ட வீரர் டெஸ்ட் தொடர்களில் மட்டும் சிறப்பாக விளையாடினால் போதாது. இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் டி-20 தொடரிலும் சிறப்பாக பந்து வீச வேண்டும் என்று கூறியுள்ளார்.
முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா இங்கு குறிப்பிடும் வீரர் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் 'முஹம்மது ஷமி' தான். ஏனென்றால், நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இவரின் பந்து வீச்சு மட்டும் தான் ஆறுதல் தரும் ஒரு விடயமாக இருந்தது. மேலும், பந்து வீசிய இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் நியூசிலாந்து அணியின் பந்து வீச்சு இணையாக இருந்தது இவர் ஒருவரின் பந்து வீச்சு தான். தவிர, கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஐபிஎல் தொடரிலும் ஷமி தனது துல்லியமான பந்து வீச்சு திறனை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த இரண்டு விடயங்களை கையில் எடுத்துள்ள இந்திய ரசிகர்கள் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஷமியை விளையாட வைக்கலாமா என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். இந்த கேள்விகளுக்கு பதிலளித்துள்ள ஆகாஷ் சோப்ரா, "இந்திய டி20 அணியில் ஷமி எப்போதுமே ஒரு சிறந்த தேர்வாக இருந்ததில்லை. ஏனெனில் அவரைவிட சிறந்த பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் உள்ளனர். அவர்கள் தான் எப்பொதுமே முதல் தேர்வாக இருப்பார்கள். பஞ்சாப் அணிக்காக அவர் கடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்து வீசினார். ஆனால், காயத்தால் அவசிப்பட்ட அவர் இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்து வீசவில்லை.
நீங்கள் டி20 அணியில் ஷமியை தேர்வு செய்ய நினைத்தால், அந்த வாய்ப்பானது அவருக்கு அவ்வளவு எளிதில் கிடைத்து விடாது. ஒருவேளை அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும், அடுத்து வரும் ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக பந்து வீசினால் மட்டுமே டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழக வீரரான நடராஜன் உடல் தகுதி அடைந்துவிட்டால் அவருக்கு நிச்சயம் இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்று கூறியுள்ள சோப்ரா, "ஷமியின் டி20 ரெக்கார்டுகள் நன்றாக இருக்கின்றன. ஆனால் மற்றவர்களை விட சிறப்பானதாக இல்லை. ஜாஸ்பிரித் பும்ராவிற்கு எப்போதுமே அணியில் இடம் இருக்கும். புவனேஷ்வர் குமாரும் அப்படிதான். மேலும் காயமடைந்திருக்கும் நடராஜன் உடல் நலம் தேறி வந்துவிட்டால் அவரும் இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்பதால் ஷமிக்கான வாய்ப்பு மிக குறைவாகவே இருக்கிறது." என்று குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.