Pakistan all-rounder Abdul Razzaq tamil news : பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் அப்துல் ரசாக், இந்திய கிரிக்கெட் வீரர்களை பாகிஸ்தான் வீரர்களுடன் ஒப்பீடு செய்ய மறுத்துள்ளார். அதேசமயம் பாகிஸ்தான் அணியில்தான் நிறைய டேலன்டான வீரர்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் இவர்களில் சிறந்த வீரரை தேர்வு செய்யுமாறு ஒரு நேர்காணலில் கேட்டபோது, “முதலில் நாம், விராட் கோலியை பாபர் ஆசாமுடன் ஒப்பீடு செய்யக்கூடாது. அதே சமயத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்களுடன் பாகிஸ்தான் வீரர்களை ஒப்பிடக்கூடாது. ஏனென்றால் பாகிஸ்தானில் நிறைய டேலன்டான வீரர்கள் உள்ளார்.
எங்கள் அணியின் கிரிக்கெட் வரலாற்றைப் பார்த்தால், முகமது யூசப், இன்சமாம்-உல்-ஹக், சயீத் அன்வர், ஜாவேத் மியாண்டாத், ஜாகீர் அப்பாஸ் மற்றும் இஜாஸ் அகமது போன்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கக்கூடிய பல சிறந்த வீரர்கள் உள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.
இன்னும் சற்று விரிவாக விளக்க முயற்சி செய்துள்ள முன்னாள் ஆல்ரவுண்டர் ரசாக், இந்தியா - பாகிஸ்தான் இடையே நிறைய போட்டிகள் நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் கோலி மற்றும் ஆசாமுக்கு இடையே உள்ள வித்தியாசங்களை, ஒரு நியாயமான முறையில் ஒப்பீடு செய்ய முடியும் என்று கூறியுள்ளார்.
“விராட் கோலி மற்றும் பாபர் ஆசாம் ஆகிய இரு வீரர்களும் முற்றிலும் மாறுபட்ட வீரர்கள். இருவரையும் ஒப்பிட்டுப் பார்க்க விரும்பினால், பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் போட்டிகள் நடத்தப்பட்டு, சிறந்த வீரர் யார் என்று தீர்மானிக்கலாம்.
விராட் கோலி ஒரு நல்ல வீரர், அவர் பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டார். எனக்கு எதிராக அவர் விளையாடியதில்லை. ஆனால் இந்தியர்கள் தங்கள் வீரர்களை பாகிஸ்தானுடன் ஒப்பிடவில்லை என்றால், நாங்கள் அதைச் செய்யக்கூடாது” என்று ரஸாக் கூறியுள்ளார்.
தற்போது அனைத்து பார்மெட்டுகளிலும் சிறந்த பேட்ஸ்மேன்களாக இரு அணிகளின் கேப்டன்கள் (கோலி மற்றும் ஆசாம்) கருதப்படுகிறார்கள். கேப்டன் கோலி கேப்டன் ஆசாமை விட முன்னரே அணியில் தேர்வு செய்யப்பட்டவர். ஆசாம் பாகிஸ்தான் அணியில், வேகமாக வளர்ந்து வரும் வீரர்களில் ஒருவராக உள்ளார்.
"பாபர் ஆசாம் ZTBL இல் ஐந்து முதல் ஆறு ஆண்டுகள் எனக்கு கீழ் விளையாடினார், நான் அவரை ஒருபோதும் கேப்டன் பொறுப்பிலிருந்து கைவிடவில்லை. அவர் மிகவும் திறமையானவர் மற்றும் மிகவும் ஒழுக்கமான பேட்ஸ்மேன். அவர் உலக கிரிக்கெட் அரங்கில் தன்னை நிரூபித்து, இப்போது முதலிடத்தில் உள்ள பேட்ஸ்மேனாக உள்ளார். மேலும் அவருக்கு சரியான பயிற்சி வழங்கபப்ட்டால், அவர் எல்லா பதிவுகளையும் முறியடிப்பார்" என்று ரசாக் கூறியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil