Cricket news in tamil: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் 227 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை சேர்த்து இருந்தது. சிறப்பாக விளையாடிய சிப்ளி ( 87) முதல் நாள் ஆட்ட இறுதியில் அவுட் ஆகி வெளியேறி இருந்தார். மறுமுனையில் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் பின்னர் களமிறங்கிய பேன் ஸ்டோக்ஸ்வுடன் ஜோடி சேர்ந்தார்.
இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் பந்து வீச்சுகளை வெளுத்து வாங்கினார் பேன் ஸ்டோக்ஸ். அதிரடி காட்டிய பேன் ஸ்டோக்ஸ் 83 ரன்களிலும், தனது 100 வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்த ஜோ ரூட் 218 ரன்களிலும் அவுட் ஆகி வெளியேறினர். தொடர்ந்து களமிறங்கிய ஒல்லி போப் 34 ரன்களிலும், பட்லர் 30 ரன்களிலும், டாம் பாஸ் 34 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். முதல் டெஸ்டிலே சிறப்பான தொடக்கத்தை கொடுத்த இங்கிலாந்து அணி 190.1 ஓவர்களில் 578 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில், பும்ரா அஸ்வின் தலா 3 விக்கெட்டுகளையும், இஷாந்த், நதீம் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர்.
அதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி வீரர்கள், சரியான துவக்கம் கொடுக்கவில்லை. அணியின் சிறந்த ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா (6), கேப்டன் விராட்கோலி (11), மற்றும் ரஹானே (1) சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். இதனால் இந்திய அணி 73 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது. இதனையடுத்து 5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த புஜாரா, பண்ட் விக்கெட் சரிவைத் தடுக்க போராடியது. சதமடிப்பார் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 88 ரன்களிலே ஆட்டமிழந்தார். அரைசதம் கடந்திருந்த புஜாரா 73 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். எனவே 3-ம் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி 6 விக்கெட்களை இழந்து 257 ரன்கள் எடுத்திருந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” t.me/ietamil
அப்போது களத்தில் இருந்த வாஷிங்டன் சுந்தர், அஸ்வின் ஜோடி 4-வது நாள் ஆட்டத்தை சிறப்பாக ஆட துவங்கி இருந்தது. அதிரடி காட்ட துவங்கி இருந்த அஸ்வின் ஜேக் லீச் வீசிய பந்தில் ஜோஸ் பட்லரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். மறுமுனையில் இருந்த சுந்தர், சரியான ஜோடி கிடைக்காமல் தடுமாறி 85 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். எனவே முதல் இன்னிங்ஸின் இறுதியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 337 ரன்களைச் சேர்த்திருந்தது. இங்கிலாந்து அணி தரப்பில், டோமனிக் பெஸ் 4 விக்கெட்டுகளும், ஆர்ச்சர், ஜேக் லீச், ஆண்டர்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி இருந்தனர்.
இதனையடுத்து 241 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து அணி, இந்திய அணி வீரர்களின் அசத்தலான பந்து வீச்சில் அடுத்தடுத்த விக்கெட்டுகளை பறிகொடுத்து 178 ரன்களிலே சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ரூட் 40 ரன்களும்,ஒல்லி போப் 28 ரன்களும், பெஸ் 25 ரன்களும், பட்லர் 24 ரன்களும் எடுத்திருந்தனர். அபாரமாக பந்து வீசிய உள்ளூர் நாயகன் அஸ்வின் 6 விக்கெட்டுகளும், நதீம் 2 விக்கெட்டுகளும், இஷாந்த், பும்ரா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தி இருந்தனர்.
420 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்திய இந்திய அணி 4-வது நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க ஆட்டகாரர் ரோகித் சர்மா 12 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், புஜாரா 12 ரன்களிலும், கில் 15 ரன்களிலும் களத்தில் இருந்தனர். 381 ரன்கள் தேவை என்ற நிலையில், 5ம் நாள் ஆட்டத்தில் களமிறங்கிய இந்திய அணி அதிரடி காட்ட துவங்கியது. ஜேக் லீச் வீசிய பந்தில் புஜாரா ஆட்டமிழக்க, அதன்பின் ஒருவர் பின் ஒருவராக நடையைக் கட்ட ஆரம்பித்தனர். அணியை சரிவில் இருந்து மீட்க போராடிய அணியின் கேப்டன் கோலி பேன் ஸ்டோக்ஸ் வீசிய பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். போட்டியை ட்ரா செய்ய போராடிய இந்திய அணி, 2வது இன்னிஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 192 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 227 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
இங்கிலாந்து அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய ஜேக் லீச் 4 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளையும், ஜோஃப்ரா ஆர்ச்சர், டொமினிக் பெஸ், பென் ஸ்டோக்ஸ் தலா 1 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” t.me/ietamil