Cricket news in tamil: ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் சென்றுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி 11 ரன்னில் வென்றது. இந்த நிலையில் இன்று நடந்த 2வது போட்டியை 19 ரன்னில் வென்ற ஜிம்பாப்வே அணி தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.
ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து களம் கண்ட பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிய 1 பந்து இருந்த போதே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 99 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வியை தழுவியது.
இன்றை ஆட்ட நேரத்தில் ஜிம்பாப்வே அணியின் துவக்க வீரர் டினாஷே கமுன்ஹுகாம்வே பந்தை விரட்ட தயாராக இருந்த போது, பாகிஸ்தான் அணியின் அறிமுக வீரர் அர்ஷத் இக்பால் தனது 2வது ஓவரை வீச வந்தார். அறிமுக போட்டியிலே பந்து வீச்சில் மிரட்டிய அவர், தொடர்ந்து வீசிய பவுன்சரில் துவக்க வீரர் கமுன்ஹுகாம்வேவின் ஹெல்மட்டின் வெளிப்புற அடுக்கை பறக்க விட்டார். அந்த ஹெல்மட் இரண்டு துண்டாக சிதறி கீழே விழுந்தது.
அதிர்ச்சியில் என்ன செய்வதென்று அறியாத கமுன்ஹுகாம்வே, கடகடவென க்ளோவ்ஸ் மற்றும் ஹெல்மட்டை கழற்றினார். பந்தை பிடிக்க தயாராக இருந்த பாகிஸ்தான் அணியினர் சில வினாடிகளில் அங்கு குவிந்தனர்.
பேட்ஸ்மேனின் நிலையை கண்காணிக்க வந்த ஜிம்பாப்வே அணியின் பிசியோ, ஆட்டத்தை மீண்டும் தொடங்குவதற்கு முன்பு மூளையதிர்ச்சி சோதனையை மேற்கொண்டார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " (https://t.me/ietamil)