Dwayne Bravo Tamil News: சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்-ரவுண்டர் வீரர் டுவெயின் பிராவோ. கடந்த 2004ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிராக ஆட்டத்தில் அறிமுகமான பிராவோ இதுவரை 90 டி-20 போட்டிகளில் விளையாடி1245 ரன்கள் குவித்து 78 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும், 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2200 ரன்களும், 86 விக்கெட்டுகளையும், 164 ஒருநாள் போட்டிகளில் ஆடி 2968 ரன்களும், 199 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் மட்டுமின்றி உலக அளவில் நடைபெற்று வரும் பல டி20 லீக் தொடர்களிலும் முக்கிய வீரராக பங்கேற்று வருகிறார் பிராவோ. குறிப்பாக ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிக ஆண்டுகள் விளையாடி வருகிறார். மேலும், அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு வீரராகவும் பிராவோ வலம் வருகிறார்.

தற்போது நடப்பு டி20 உலகக்கோப்பையில் பங்கேற்றுள்ள 38 வயதான டுவெயின் பிராவோ சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுடன் நாளை வெஸ்ட் இண்டீஸ் மோதும் போட்டியே பிராவோவின் கடைசி சர்வதேச போட்டியாகும். இதனால், அவரது ரசிகர்கள் வருத்தத்தில் ஆழ்த்துள்ளனர். எனினும், பிராவோ தொடர்ந்து டி20 லீக் போட்டிகளில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“