Afghanistan Cricket Board (ACB) Tamil News: ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் அமைப்பு கைப்பற்றியுள்ள நிலையில், அங்கு வசிக்கும் மக்கள் பதற்றமும், குழப்பமும் நிறைந்தவர்களவே காணப்படுகிறார்கள். 20 ஆண்டுகளுக்கு பிறகு தலைநகர் காபூலை கைப்பற்றியுள்ள இந்த அமைப்பின் புதிய சட்ட திட்டங்களுக்கு பயந்த லட்ச கணக்காணோர் சொந்த நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் தஞ்சமைடைந்துள்ளனர். மேலும், அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், நிலையிலான வசிப்பிடமின்மை, வேலை இல்ல திண்டாட்டம் என ஆப்கான் மக்கள் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளனர்.
இந்நிலையில், ஆட்சி பொறுப்பேற்கவுள்ள தாலிபான்கள் அமைப்பு விளையாட்டு போட்டிகள் மற்றும் தொடர்களை முன்னெடுக்க அனுமதிக்க முடிவு செய்துள்ளதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் உயர் அதிகாரி ஒருவர் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இதழுக்களித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடருக்கு தாலிபான்கள் அமைப்பு பச்சை கொடி காட்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த இரு அணிகள் மோதவுள்ள 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வருகிற நவம்பர் 27 மற்றும் டிசம்பர் 1ம் தேதி அன்று ஆஸ்திரேலியாவின் ஹோபார்ட்டில் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டே நடத்த திட்டமிடப்பட்ட இந்த தொடர் கொரோனா தொற்று பரவலால் தள்ளிவைக்கப்பட்டது. மேலும், அக்டோபர் 17 முதல் நவம்பர் 15 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க உள்ள டி 20 உலகக் கோப்பை தொடரிலும் ஆப்கான் அணி பங்கேற்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பாகிஸ்தான் அணிக்கு எதிரான இருதரப்பு ஒருநாள் தொடர் மட்டும் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் ஆண்கள் கிரிக்கெட் அணி கடந்த 2001ல் தாலிபான்கள் வீழ்த்தப்பட்ட பிறகு உருவாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அந்த அணி விரைவான முன்னேற்றம் அடைந்ததுடன், 2017 இல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் (ICC) முழு உறுப்பினர் டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (ஏசிபி) தலைமை நிர்வாக அதிகாரி ஹமீத் ஷின்வாரி கூறியதாவது:-

தாலிபான்கள் கிரிக்கெட்டை ஆதரிக்கிறார்கள் என்பதற்கான பச்சை சிக்னல் அவர்களிடமிருந்து தற்போது எங்களுக்கு கிடைத்துள்ளது. அவர்களின் அரசு கிரிக்கெட்டை ஆதரிக்கும் முடிவை எடுத்து வருகிறது. கிரிக்கெட் தொடர்கள் அனைத்தும் திட்டமிட்டபடி நடைபெறும் என தாலிபான் கலாச்சார ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் எங்களுக்குத் தகவல் அளித்து இருக்கிறார். தாலிபான்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியை ஆதரிப்பார்கள், அதைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் நடைபெறும்.
இளைஞர்களின் விளையாட்டுக்கு அவர்கள்ஆதரவளிப்பார்கள் என்பது தெளிவான செய்தி. அதுதான் சிறந்த அறிகுறி. இருப்பினும், மகளிர் கிரிக்கெட்டின் எதிர்காலம் பற்றி தற்போது எங்களுக்குத் தெரியாது. அது குறித்து தாலிபான்களின் அரசே முடிவு செய்யும்.
தற்போது நாங்கள் ஆப்கானிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை ஆகிய 3 அணிகள் இடம்பெறும் டி 20 முத்தரப்பு தொடருக்காக பணியாற்றி வருகிறோம். அநேகமாக, இது டி 20 உலகக் கோப்பைக்கு முன்பு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முத்தரப்பு தொடருக்கு முன்னதாக எங்கள் அணி கத்தாரில் முகாம் இட உள்ளது.
உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளையும் விரைவில் தொடங்க உள்ளோம். எங்கள் அனைத்து மாகாணங்களுடனும் ஒரு நாள் போட்டியை விளையாட முடிவு செய்துள்ளோம். நாங்கள் அதை பட்டியல் ஏ (A) போட்டி என்று அழைக்கிறோம். விரைவில் நங்கள் தொடங்கவுள்ள அந்த போட்டிகளை உலகம் முழுவதும் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளோம்.
கிரிக்கெட்டின் அழகு என்னவென்றால் அது அனைவராலும் விரும்பப்படுகிறது. எந்த சூழ்நிலையாக இருந்தாலும் சரி. கடந்த 20 ஆண்டுகளில் இருந்து, தாலிபான் உட்பட சமூகத்தின் அனைத்து பிரிவினரிடமிருந்தும் எங்களுக்கு ஆதரவு கிடைத்து வருகிறது. தாலிபான்களால் கிரிக்கெட் வீரர்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படவில்லை. கடந்த 20 ஆண்டுகளில் ஒரு உயிரிழப்பை கூட நாங்கள் சந்தித்ததில்லை. விளையாட்டுகளில், குறிப்பாக கிரிக்கெட்டில் எந்த பிரச்சனையும் பார்க்கவில்லை.
இவ்வாறு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (ஏசிபி) தலைமை நிர்வாக அதிகாரி ஹமீத் ஷின்வாரி கூறியுள்ளார்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil