Cricket news in tamil: இலங்கை மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய கிரிக்கெட் அணி தற்போது 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலிரண்டு போட்டிகளில் வெற்றியை சுவைத்துள்ள இந்திய அணி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இந்த 2ம் தர அணியை மூத்த வீரர் ஷிகர் தவான் வழிநடத்தி வரும் நிலையில், போட்டியில் களம் கண்ட அனைத்து வீரர்களும் தங்களின் சிறப்பான பங்களிப்பை கொடுத்து வருகின்றனர். இந்த தொடரின் முதல் போட்டியில் நீண்ட காலமாக அணியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த குலதீப் யாதவ் சிறப்பாக பந்து வீசி மீண்டும் கவனம் ஈர்த்தார். இதே போல் தொடருக்கான அணியை வழிநடத்தி வரும் மூத்த வீரர் தவான் இந்த ஆட்டத்தில் 86 ரன்களை குவித்ததன் மூலம் 1000 ரன்கள் மைல்கல்லை அதிவேகமாக எட்டிய இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

மேலும் இந்த ஆட்டத்தில் களமிறங்கிய இளம் வீரர் இஷன் கிஷன் தனது அறிமுகப் போட்டியிலே அரைசதம் விளாசி இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இவருடன் ஒரு நாள் போட்டியில் அறிமுகமாகிய சூரியகுமார் யாதவும் முக்கியமான நேரத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அதோடு 2வது ஒரு நாள் போட்டியில் அரைசதம் அடித்து தனது முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில், எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடரில் இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அணியில் நிச்சயம் இடம் பிடிப்பார்கள் என இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இஷான் கிஷன் விளையாடும் விதத்தைப் பார்க்கும்போது அவர் டி20 உலக கோப்பை தொடரில் தவிர்க்க முடியாத வீரராக அணியில் இடம் பெறுவார்.மேலும் அவரது இயற்கையான ஆட்டத்தை விளையாட வைத்தால் அவர் மிகப்பெரிய இன்னிங்சை விளையாடி கூடிய திறன் படைத்தவர்.

இஷான் கிஷனுக்கு அடுத்து சூர்யகுமார் யாதவ் இடம் பெறுவதையும் யாராலும் தடுக்க முடியாது. ஏனெனில் அவர்கள் இருவரும் விளையாடும் விதத்தைப் பார்க்கும்போது நிச்சயம் சீனியர் வீரர்களுக்கு பதிலாக இவர்கள் இருவரும் இடம் பிடிப்பார்கள் என்று நான் கருதுகிறேன். சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் அதிரடியாக விளையாடுவது மட்டுமின்றி தேவையான நேரத்தில் விரைவாக ரன் குவிக்க கூடிய திறன் படைத்தவர்கள். எனவே இவர்கள் இருவரும் கண்டிப்பாக டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை” ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil“