Cricket news in tamil: இலங்கை சென்றுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி-20 தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ள இந்திய அணி நேற்று முன் தினம் நடந்த முதல் டி-20 போட்டியில் 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் களம் கண்ட இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா இதுவரை பெரிதும் சோபிக்கவில்லை. இருப்பினும் முதல் டி-20 போட்டியில் சில பெரிய ஷாட்டுகளுக்கு முயற்சி செய்தார். ஹர்திக் பாண்டியாவின் இந்த பார்ம் குறித்து பேசிய சில முன்னாள் வீரர்கள் அவர் நிச்சயம் மீண்டும் அவரது பார்ம்க்கு வருவார் என தெரிவித்துள்ளனர். தவிர, இந்த கிரிக்கெட்தொடரை வர்ணனை செய்து வரும் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் ‘ஹர்திக் பாண்டியா எப்போது வேண்டுமானாலும் பார்முக்கு வரலாம். ஏனென்றால் அவர் ஐபிஎல் போட்டிகள் போன்ற நீண்ட டி-20 தொடர்களில் விளையாடிய அனுபவம் உடைவர்’ என குறிப்பிட்டு இருந்தார்.

இது ஒருபுறம் இருக்க, இலங்கை தொடரில் பங்கேற்றுள்ள ஹர்திக் பாண்டியாவின் செயல் அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல் டி-20 போட்டிக்கு முன் மைதானத்தில் இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இந்திய வீரர் ஹர்திக் பாண்டியாவிடம் இலங்கை வீரர் சாமிகா கருணாரத்ன ஏதோ பேசினார். பின்னர் ஹர்திக் பாண்டியா அவரது பேட்டை அந்த இலங்கை வீரரிடம் கொடுத்தார். இலங்கை வீரர் சாமிகா கருணாரத்ன பேட்டை ஒரு முறை சுழற்றி பார்த்த்து விட்டு தன்னோடு எடுத்து சென்றார். பிறகு தான் ஹர்திக் பாண்டியா தனது பேட்டை இலங்கை வீரர் சாமிகா கருணாரத்னவுக்கு பரிசளித்துள்ளார் என தெரிய வந்தது.

சில நிமிடங்கள் கழித்து தெரிவந்த இந்த விடயம் அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள சாமிகா கருணாரத்ன,”எனது டி 20 அறிமுக போட்டியில் எனது ரோல் மாடலான ஹர்திக் பாண்டியாவிடம் இருந்து பேட் பெறுவது பெருமையாக உள்ளது.
ஹர்திக் பாண்டியா, நீங்கள் ஒரு அற்புதமான மனிதர். உங்கள் அன்பு பரிசு என்னை நெகிழ செய்துள்ளது. இந்த நாளை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். கடவுள் எப்போதும் உங்களை ஆசீர்வதிப்பாராக!” என்று பதிவிட்டுள்ளார்.
இலங்கை வீரருக்கு ஹர்திக் பாண்டியா பேட் கொடுத்த வீடியோ இணைய பக்கங்களில் வைரலாகி வருகிறது. அதே வேளையில் அவரது இந்த செயல் இணைய வாசிகள் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil“