Cricket news in tamil: ஐபிஎல் தொடருக்கான டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் விளையாடி வருபவர் தென்னாப்பிரிக்க அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நார்ட்ஜே. அந்த அணியில் கடந்த 2019ம் ஆண்டு அறிமுகமாகிய இவர், இதுவரை 10 டெஸ்ட் போட்டிகள், 9 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடி 63 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். மேலும் 16 ஐபிஎல் போட்டிகளில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
தற்போது தென்னாப்பிரிக்க அணியில் தவிர்க்க முடியாத வேகப் பந்து வீச்சாளராக உருவெடுத்துள்ள நார்ட்ஜே, கடந்த 2010ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கு வலைப்பயிற்சியில் பந்து வீசியிருந்தார். அந்த நினைவுகளை சமீபத்தில் அவர் பகிர்ந்திருந்தார். அப்போது தோனிக்கு பந்து வீசுவதற்கு முன்னர் அவருக்கு கால்களை சரியாக நகர்த்தி பேட்டிங் செய்யத் தெரியாது என தான் நினைத்ததாக கூறியுள்ளார்.
"நான் அந்த சமயத்தில் அவ்வளவு பெரிய பையன் கிடையாது. ஆனால் பந்து வீசுவதில் பயந்ததில்லை. ஒரு முறை தோனி வலையில் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது தோனிக்கு கால்களை சரியாக நகர்த்தி பேட்டிங் தெரியாது என்று தான் நினைத்தேன்.
மேலும் அது தோனி தான் என்றும் எனக்குத் தெரியாது.
நான் அவருக்கு எதிராக பந்துவீசும் போது ஒரு இரண்டு பந்துகளை அவர் எந்தவித கால் நகர்வுகளும் இன்றி தூக்கி அடித்தார். அதன் பின்னரே நான் தோனி எவ்வளவு பெரிய வீரர் என்று உணர்ந்தேன்." என்று நார்ட்ஜே கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்துவீசிய நார்ட்ஜே 22 விக்கெட்டுகளை சாய்த்தார். மேலும் அந்த அணி இறுதி போட்டிக்கு முன்னேர உழைத்த முக்கிய வீரர்களில் ஒருவராகவும் இருந்தார்.
2010ம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் லீக் டி 20 தொடரில் கேப்டன் தோனி தலைமையில் களமிறங்கிய சிஎஸ்கே அணி, தொடரின்
இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க உள்ளூர் அணியான வாரியர்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.
மீண்டும் 2014ல் நடந்த தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பை வென்ற நிலையில், 2011 மற்றும் 2013ம் ஆண்டு நடந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி வென்றது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“