Cricket news in tamil: இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, முதலில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இந்த தொடர் துவங்க ஒரு மாதம் கால இடைவெளி உள்ளதால் வீரர்கள் அனைவருக்கும் 3 வாரங்கள் விடுமுறை அளிக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு சுற்றுலா செல்லலாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பால் மகிழ்ச்சியுற்ற இந்திய வீரர்கள் தங்கள் குடும்பங்களுடன் ஊர் சுற்றி பொழுதை கழித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இங்கிலாந்து சென்ற இந்திய அணியினர் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நேற்று செய்தி வெளியானது. பின்னர், ஊடகங்களுக்கு இந்திய அணியின் நிர்வாகம் அளித்த பேட்டியில் கொரோனா தொற்று உறுதியான அந்த இரு வீரர்களும் நலமாக உள்ளனர் என குறிப்பிடப்பட்டது.

இந்த இரு வீரர்களில் ஒருவர் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் ரிஷப் பண்ட், யூரோ கோப்பை கால்பந்து போட்டிகளை காண சென்றர் எனவும், கேப்டன் கோலியின் அறிவுரைகளை கேளாமல் ரசிகர்கள் அதிகம் கூடும் இது போன்ற இடத்திற்கு சென்று வந்ததால் தான் தொற்று உறுதியானது எனவும் பலரும் குறிப்பிட்டு பேசியிருந்தனர்.

அதோடு, அவ்வளவு பெரிய கூட்டத்திற்கு மத்தியில் ரிஷப் பண்ட் எந்தவிதமான மாஸ்க் (முகக்கவசம்) அணியாமல் இருந்துள்ளார் என்றும், ரசிகர்களுக்கும் செல்பி எடுக்க அனுமதி கொடுத்துள்ளார் என்றும் சர்ச்சை வெடித்துள்ளது. இது குறித்து பேசியுள்ள பிசிசிஐ தலைவர் கங்குலி, “இங்கிலாந்தில் யூரோ கோப்பை கால்பந்து போட்டி மட்டுமின்றி விம்பிள்டன் போட்டிகளும் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில் ரிஷப் பண்ட் கலந்து கொள்வதில் எந்த தவறும் இல்லை. மேலும் நம்மால் அனைத்து நேரங்களிலும் மாஸ்க் அணிந்து கொண்டே இருக்க முடியாது என்பதையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அதனால் இந்த விஷயத்தை பெரிதாக்க வேண்டாம்” என கங்குலி தனது பேட்டியில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இளம் வீரர் ரிஷப் பண்ட் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், 10 நாட்களுக்கு பிறகு அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு நெகட்டிவ் வந்தால் அணியுடன் இணைவார் என்றும் கூறப்பட்டுள்ளது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil“