Cricket news in tamil: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வென்றது. அங்கு நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதனால் தொடர் 1-1 என்று சம நிலையில் உள்ளது.
இந்த நிலையில், இவ்விரு அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள மொட்டேரா (தற்போது நரேந்திர மோடி) மைதானத்தில் இன்று முதல் நடைபெற்று வருகிறது. இளஞ்சிவப்பு பந்து வீசப்படும் பகரலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெறும் இந்த போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து, முதல் இன்னிங்ஸை தொடங்கியது.
இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜாக் கிராவ்லி மற்றும் டொமினிக் சிபிளி களமிறங்கினர். இந்த ஆட்டத்தை நிதானமாக நகர்த்த நினைத்த கிராவ்லி, இஷாந்த் சர்மா வீசிய 2 வது ஓவரிலே விக்கெட்டை பறிகொடுத்து, பூஜ்ய ரன்களுடன் பெவிலியன் நோக்கி நடையை கட்டினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஜானி பேர்ஸ்டோவ் அக்சார் படேல் வீசிய 6 ஓவரில் அவுட் ஆகி ரன் ஏதும் எடுக்கமால் வெளியேறினார்.
பின்னர் ஆடுகளத்திற்குள் வந்த அணியின் கேப்டன் ஜோ ரூட், மறுமுனையில் இருந்த டொமினிக் சிபிளியுடன் ஜோடி சேர்ந்தார். விக்கெட் சரிவை தடுக்க மிக கவனத்துடன் விளையாடிய இந்த ஜோடியில், தொடக்க ஆட்டக்காரர் சிபிளி அரைசதம் கடந்திருந்தார். மறுமுனையில் ஆடிய கேப்டன் ரூட், அஸ்வின் வீசிய 21.5 ஓவரில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து சிபிளியும் அக்சார் படேல் வீசிய 24.4 ஓவரில் ஆட்டமிழந்தார். அணிக்கு நல்ல துவக்கம் கொடுத்த சிபிளி 84 பந்துகளில் 10 பவுண்டரிகளை விளாசி 53 ரன்களை சேர்த்தார்.
இன்றய ஆட்டத்தின் முதல் தேநீர் இடைவேளையின் போது 4 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி 81 ரன்களை சேர்ந்திருந்தது.
தேநீர் இடைவேளைக்கு பிறகு களமிறங்கிய பேன் ஸ்டோக்ஸ், ஒல்லி போப் ஜோடியில், அஸ்வின் வீசிய 27.2 ஓவரில் ஒல்லி போப் அவுட் ஆகி வெளியேற, மறுமுனையில் நின்ற பேன் ஸ்டோக்ஸ் அக்சார் படேல் வீசிய அடுத்த ஓவரில் (28.5) ஆட்டமிழந்தார். இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஜோப்ரா ஆர்சர், அக்சார் வீசிய பந்திலும், ஜாக் லீச் அஸ்வின் வீசிய பந்திலும் அவுட் ஆகி வெளியேறினர்.
அதனைத் தொடர்ந்து களமிறங்கி சிறிது நேரம் தாக்குப் பிடித்த பேன் ஃபோக்ஸ் மற்றும் ஸ்டூவர்ட் பிராடு ஜோடியில், அக்சார் வீசிய 46.2 ஓவரில் ஸ்டூவர்ட் பிராடும், அக்சார் வீசிய அடுத்த ஓவரில் பேன் ஃபோக்ஸ்ம் ஆட்டமிழந்து வெளியேறினர். 50 ஓவர் கூட பேட்டிங் செய்யாத இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் 112 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
இந்திய அணியில் தரப்பில் மிகச் சிறப்பாக பந்து வீசிய அக்சார் படேல் 6 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா 1 விக்கெட்டையும் எடுத்தனர்.
அகமதாபாத்தில் நடைபெறும் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது டெஸ்டில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி தொடக்க வீரர் ரோகித் சர்மா 57 ரன்களுடனும், ரஹானே ஒரு ரன்னுடனும் களத்தில் நிற்கிறார்கள்.
சுப்மான் கில் (11 ரன்கள்), புஜாரா (0 ரன்), கோலி (27 ரன்) ஆகியோர் அவுட் ஆனார்கள். ஜாக் லீச் பந்தில் புஜாரா, கோலி ஆகியோர் முறையே எல்.பி.டபிள்யு, போல்ட் முறையில் வீழ்ந்தனர். கில், ஆர்ச்சர் பந்தில் கேட்ச் ஆனார். முன்னதாக பேட் செய்த இங்கிலாந்து 112 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியா 7 விக்கெட் கைவசம் வைத்திருக்கும் நிலையில் 13 ரன்களே பின் தங்கியிருக்கிறது. வியாழக்கிழமை 2-ம் நாள் ஆட்டம் நடைபெறும்.
இன்று 2ம் நாள் ஆட்டத்தில் களத்தில் நின்ற ரோகித் சர்மா, ரஹானே ஜோடி ஆட்டத்தை நிதானமாக நகர்த்த முயற்சித்த போது, இங்கிலாந்தின் ஜாக் லீச் வீசிய 38.2 ஓவரில் ரஹானே எல்.பி.டபிள்யு ஆகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய விக்கெட் கீப்பர் ரிஷாப் பந்த் 1 ரன்னிலும், வாஷிங்டன் சுந்தர் பூஜ்ஜிய ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இன்றைய இரவு உணவு இடைவேளைக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் எடுத்துவிட வேண்டும் என்ற முனைப்பில் விளையாடிய இங்கிலாந்து அணி, களத்தில் சிறிது நேரம் தாக்குப்பிடித்த அஸ்வினை அந்த அணியின் ஜோ ரூட் ஆட்டமிழக்க செய்தார். மறுமுனையில் நின்று கொண்டிருந்த இஷாந்த் சர்மா பின்னர் களமிறங்கிய பும்ராவுடன் ஜோடி சேர்ந்தார். சிக்ஸர் அடித்து கலக்கிய இஷாந்த் சர்மாவுடன் நீண்ட நேரம் தாக்குபிடிக்காத பும்ரா ஜோ ரூட் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார்.
மிக சிறப்பாக பந்து வீசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் 5 விக்கெட்டுகளை எடுத்தார். அவரை தொடர்ந்து சிறப்பாக பந்து வீசிய ஜாக் லீச் 4 விக்கெட்டுகளையும், ஜோப்ரா ஆர்சர் 1 விக்கெட்டையும் எடுத்தனர்.
தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி இந்திய வீரர்களின் சிறப்பாக பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் வெறும் 81 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக ஸ்டோக்ஸ் 25 ரன்களும், ரூட் 19 ரன்களும், ஒல்லி போப் 12 ரன்களும் எடுத்தனர் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி தரப்பில், அக்சர் பட்டேல் 5 விக்கெட்டுகளும், அஸ்வின் 4 விக்கெட்டுகளும், வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து முதல் இன்னிங்சில், 33 ரன்கள் முன்னிலை பெற்றதால், இந்திய அணிக்கு 49 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணையிக்கப்பட்டது. இதனையடுத்து வெற்றி இலங்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 7.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 25 ரன்களுடனும், கில் 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 4-ந்தேதி இதே மைதானத்தில் தொடங்குகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.