Cricket news in tamil: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வென்றது. அங்கு நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதனால் தொடர் 1-1 என்று சம நிலையில் உள்ளது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள மொட்டேரா மைதானத்தில் இன்று துவங்குகிறது. அதோடு இளஞ்சிவப்பு பந்து வீசப்படும் பகரலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற உள்ளது.
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று அச்சம் இன்னும் நீடித்து வருகிறது. அதோடு 3வது போட்டியின் போட்டி நடக்கும் குஜராத் மாநிலம், கொரோனா தொற்று அதிகம் பரவி வரும் மாநிலங்களான மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களின் அருகாமையில் உள்ளது. எனவே போட்டி நடக்க உள்ள மைதானத்தில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.
“அனைத்து நுழைவாயில்களும் சுத்திகரிக்கப்பட்டுள்ளன.மைதானத்திற்கு உள்ளே நுழைய முகமூடிகள் கட்டாயமாகும். கை சுத்திகரிப்பு மருந்துகள் மைதானத்திற்குள்ளே கிடைக்க வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரண்டு பார்வையாளர்களுக்கு இடையே ஒரு இருக்கை இடைவெளி இருக்கும் வகையில் இருக்கை வசதி அமைக்கப்பட்டுள்ளது.
ரசிகர்களுக்காக ஸ்டேடியம் வளாகத்திற்குள் பரிசோதனை செய்யும் எட்டு கியோஸ்க்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கியோஸ்க்களில் மொத்தம் ஆறு மருத்துவர்கள் மற்றும் 12 செவிலியர்கள் இருப்பார்கள். யாருக்கும் வெப்பநிலை அதிகமாக உள்ளது என்று கண்டறியப்பட்டால், அந்த நபர்கள் கியோஸ்க்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அதோடு மூன்று ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. அதில் இரண்டு பார்வையாளர்களுக்கும், ஒன்று வீரர்களுக்கும் என்று பிரித்து வைக்கப்பட்டுள்ளது”என்று குஜராத் கிரிக்கெட் சங்கம் (ஜி.சி.ஏ) இணைச் செயலாளர் அனில் படேல் தெரிவித்துள்ளார்.
110,000 கொள்ளவு கொண்ட இந்த மைதானத்தில் 40,000 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கான டிக்கெட்டின் விலை ஒரு நாளைக்கு ரூ .300 முதல் ரூ .2,500 வரை நிர்ணயம் செய்யம்பட்டுள்ளது. அதோடு இங்கு வரும் பார்வையாளர்கள் குட்கா மற்றும் பான் போன்ற பொருட்களை கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்றும் பகலிரவு ஆட்டமாக நடக்கவுள்ள இந்த 3வது டெஸ்ட் போட்டி பிற்பகல் 2.30 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற நேரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
“கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அகமதாபாத்தில் இரவு 11 மணிக்கு மேல் ஊரடங்கு உத்தரவு இருப்பதால், போட்டி இரவு 10 மணிக்கே நிறுத்தப்படும்” என்று குஜராத் கிரிக்கெட் சங்கம் (ஜி.சி.ஏ) இணைச் செயலாளர் அனில் படேல் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” t.me/ietamil