Cricket news in tamil:
புனேவில் நடைபெற்ற இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் பேர்ஸ்டோ – பென் ஸ்டோக்ஸ் அதிரடியால் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 336 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி 43.3 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 337 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்தியா சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து அணி தற்போது 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் இவ்விரு அணிகளும் மோதும் 2வது போட்டி இன்று நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இந்திய அணியில் துவக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடிக்கு சரியான துவக்கம் கிடைக்கவில்லை. முதல் போட்டியில் சதத்தை தவறவிட்ட தவான் இந்த முறை 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மறுமுனையில் நின்ற ரோகித் சர்மா 4 பவுண்டரிகளை ஓடவிட்டு, 25 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய கேப்டன் கோலி, கே.எல். ராகுல் ஜோடி விக்கெட் சரிவை மீட்க நிதான ஆட்டத்தை தொடர்ந்து.
இந்த ஜோடியில் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்த கேப்டன் கோலி (66), 1சிக்ஸர், 3 பவுண்டரிகளை அடித்து ஆதில் ரஷீத் வீசிய 31.6 ஓவரில், கீப்பர் பட்லர் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய விக்கெட் கீப்பர் ரிஷாப் பந்த், மறுமுனையில் இருந்த கே.எல். ராகுலுடன் ஜோடி சேர்ந்தார். அணிக்கு வலுவான ரன்கள் சேர்க்க வேண்டும் என்பதை கவனத்தில் கொண்ட ராகுல் மிக நிதானத்துடனே விளையாடினார். ஆனால் மறுமுனையில் களமிறங்கி ரிஷாப் பந்த் துவக்கம் முதலே வான வேடிக்கை காட்டினார். அவ்வப்போது சிக்ஸர்களையும் பவுண்டரிகளையும் பறக்க விட்ட கே.எல். ராகுல் தனது 5 சதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ராகுல் 114 பந்துகளில் 108 ரன்கள் சேர்த்து டாம் கரண் வீசிய 44.5 ஓவரில், ஜேசன் ராய் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய ஹார்டிக் பாண்ட்யா, மறுமுனையில் இருந்த விக்கெட் கீப்பர் ரிஷாப் பந்த்துடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியை ஈசியாக உடைத்து விடலாம் என்று நினைத்த இங்கிலாந்து பந்து வீச்சாளர்களுக்கு இருவரும் சேர்ந்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர். அந்த அணியினர் வீசிய பந்துகளை பந்தாடிய இந்த ஜோடி, சிக்ஸர்களையும் பவுண்டரிகளையும் பறக்க விட்டு வான வேடிக்கை காட்டியது. இதனால் இந்த ஜோடியை பிரிக்க எந்த யுத்தியை பயன்படுத்துவது என்று அறியாமல் இங்கிலாந்து அணியினர் விழிபிதுங்கினர்.
ஒற்றைக்கையில் சிக்ஸர்களை பறக்க விட்டு அரைசதம் கடந்த ரிஷாப் பந்த், 40 பந்துகளில் 7 சிக்ஸர்களையும் 3 பவுண்டரிகளியும் பறக்க விட்டு 77 ரன்கள் சேர்த்தார். தொடர்ந்து வான வேடிக்கை காட்ட முயற்சித்த பந்த் டாம் கரண் வீசிய ஸ்லோயர் பந்தில் ஜேசன் ராய் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து களமிறங்கிய க்குருனல் பாண்ட்யா தம்பி ஹார்டிக் பாண்ட்யாவுடன் ஜோடி சேர்ந்து 1 பவுண்டரியை ஓட விட்டார். இருவரும் சேர்ந்து அணிக்கு ஒரு இமாலய ரன்களை சேர்ப்பார்கள் என்று நினைத்த போது, ஆட்டத்தில் கொஞ்சம் மந்தம் ஏற்பட்டது. இருப்பினும் சிறப்பாக ஆடிய ஹார்டிக் பாண்ட்யா 16 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 1 பவுண்டரியை அடித்திருந்தார். ஆட்ட முடிய ஒரு பந்து இருந்த போது ஜேசன் ராய் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். முதல் போட்டியைப் போல் இந்த போட்டியிலும் சிறப்பாக ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுளை இழந்து 336 ரன்கள் சேர்த்தது.
இங்கிலாந்து தரப்பில் ஆர் டோப்லி மற்றும் டாம் கரண் தலா 2 விக்கெட்டுகளையும், சாம் கரண் மற்றும் ஆடில் ரஷீத் தலா 1 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
337 ரன்கள் எடுத்தால் என்ற இமாலய இலக்கை நோக்கி களம் இறங்கிய இங்கிலாந்து வீரர்கள் துவக்கம் முதலே அதிரடியாக விளையாடினார்கள். அந்த அணியின் ஜானி பேர்ஸ்டோ 112 பந்துகளில் 124 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு வீரர் பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக விளையாடி 52 பந்துகளில் 99 ரன்கள் குவித்து அவுட் ஆனார். அந்த அணி இறுதியில் 43.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 337 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” ( https://t.me/ietamil 😉