Cricket news in tamil: இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இங்கிலாந்து அணி, தற்போது 5 போட்டிகள் கொண்ட டி – 20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. நடந்த 3 போட்டிகளில் 2ல் வென்ற அந்த அணி தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 4வது டி-20 போட்டி குஜராத்தின் அகமதாபத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தால் தொடரை இழந்து விடும் என்பதால், கேப்டன் கோலி தலைமையில் களமிறங்கும் அணி தொடரை 2-2 என்ற கணக்கில் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கியது.
இந்திய அணியில், ஷிகர் தவான், சாஹல், இஷான் கிஷான் நீக்கப்பட்டு, புவனேஷ்வர் குமார், சூர்யகுமார் யாதவ், ராகுல் சகார் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். வழக்கம் போல இந்த போட்டியிலும் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்தவு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ரோகித் சர்மா லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்கினர். இதில் ரோகித் சர்மா 12 ரன்களிலும், ராகுல் 14 ரன்களிலும் ஆட்டமிழந்த நிலையில், அடுத்து களமிறங்கிய சூர்ய குமார் யாதவ் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், கேப்டன் கோலி ஒரு ரன்னுக்கு வெளியேறினார்.
அடுத்துகளமிறங்கி ரிஷப் பண்ட் சூர்யகுமார் யாதவுடன் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஸ்கோர் வேகமாக உயர்ந்த நிலையில், 110 ரன்களை எட்டியபோது அரைசதம் கடந்திருந்த சூர்யகுமார் யாதவ் 57 (31 பந்து 6 பவுண்டரி 3 சிக்சர் )ரன்களில் அவுட் ஆனார். தொடர்ந்து பண்ட் 30 (23 பந்து 4 பவுண்டரி)ரன்களும், ஸ்ரோயாஸ் அய்யர் 37 (18 பந்து 5 பவுண்டரி 1 சிக்சர்) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், ஹர்திக்பாண்டிய 11 ரன்களும், சுந்தர் 4 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் குவித்தது. தாகூர் 10 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இங்கிலாந்து அணி தரப்பில் ஆர்ச்சர் 4 விக்கெட்டுகளும், ரஷித், வுட், கரண், ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 186 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியில், தொடக்க ஆட்டகாரர் பட்லர் 9 ரன்களிலும், மிலன் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து 3-வது விக்கெட்டுக்கு இணைந்த பேர்ஸ்டோ, ராய் ஜோடி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் அதிரடியாக ஆடிய ஜோசன் ராய் 27 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 40 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதனால் 66 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணியை பென் ஸ்டோக்ஸ் பேர்ஸ்டோ ஜோடி தூக்கி நிறுத்தியது. இதில் அதிரடியாக ஆடிய பென் ஸ்டோக்ஸ் ராகுல் சாகர் ஓவாரில் 1 சிக்சர் 2 பவுண்டரி அடித்து அதிரடிக்கு திரும்பினார்.
இதனால் இங்கிலாந்து அணியின் ரன் வேகமாக உயர்ந்த நிலையில், ஜானி பேர்ஸ்டோ 25 ரன்களில் ஆட்டமிழந்தார். 16-வது ஓவரை வீசிய ஷெர்துல் தாகூர் இரட்டை செக் வைத்தார். அந்த ஓவரின் முதல் பந்தில், பென் ஸ்டோக்சை (46 ரன்கள் 23 பந்து 4 பவுண்டரி 3 சிக்சர்) வீழ்த்திய அவர் அடுத்த பந்தில் கேப்டன் மார்கனை வீழ்த்தினார். இதனால் ஆட்டம் இந்தியா பக்கம் திரும்பிய நிலையில், 18-வது ஓவரை வீசிய ஹர்திக் பாண்டியா சாம் கரணை வீழ்த்தினார். இதனால் கடைசி ஓவரில் 23 ரன்கள் தேவை என்ற நிலையில், தாகூர் வீசிய அந்த ஓவரில் முதல் பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்ட நிலையில், 2-வது மற்றும் 3-வது பந்தில் ஆர்ச்சர் தலா ஒரு சிக்ஸ் ஒரு பவுண்டரி அடித்தார். இதனால் கடைசி 3 பந்துகளில் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது.
4-வது பந்து இரண்டுமுறை வைடாக வீசியதை தொடர்ந்து அடுத்து வீசிய 4-வது பந்தில் 1 ரன் எடுக்கப்பட்டது. 5-வது பந்தில் ஜோர்டான் ஆட்டமிழந்தார். கடைசி பந்து டாட் பாலானதால் நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில், தாகூர் 3 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்டியா, ராகுல் சகார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், புவனேஷ்வர் குமார் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது 2-2 என்ற கணக்கில் சமனில் உள்ளது. தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கு இடையிலாக 5வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை மறுநாள் இதே மைதானத்தில் நடைபெறுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” t.me/ietamil