Cricket news in tamil India vs England 4th test: இந்தியா சுற்று பயணமாக வந்துள்ள இங்கிலாந்து அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வென்றது. அங்கு நடந்த 2வது டெஸ்டில் 337 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்று பதிலடி கொடுத்தது. அதனைத் தொடர்ந்து அகமதாபாத்தில் நடந்த 3வது டெஸ்டில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. இந்நிலையில், இரு அணிகளும் மோதும் 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இன்று நடைபெறுகிறது.
உலகிலே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் தொடரின் கடைசி போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ள இந்திய அணி, ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு இன்று முதல் நடக்கும் போட்டியில் வெற்றி பெற வேண்டும் அல்லது போட்டியை சமன் செய்ய வேண்டும். அதே நேரத்தில் இங்கிலாந்து அணி தொடரை சமன் செய்ய வேண்டும் என்கிற கட்டாயத்தில் உள்ளது.
சர்ச்சைக்குரியது மொட்டெரா ஆடுகளம்
வரலாற்று சிறப்புமிக்க பகல் / இரவு ஆட்டத்தை நடத்திய நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்றைய கடைசி டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. 3வது டெஸ்டில் ஆடுகளம் ஒருதலைப்பட்சமாக மாறியது என சர்சைகள் எழுந்தது. பல கிரிக்கெட் வல்லுநர்கள் ஆடுகளம் பற்றிய விமர்சனம் செய்தனர். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கேப்டன் கோலி நேற்று புதன் கிழமை பேசியுள்ளார். எனவே இந்த முறை விக்கெட் எவ்வாறு நடந்துகொள்கிறது என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.
விராட் கோலி – எம்.எஸ்.தோனி
இங்கிலாந்து அணிக்கு எதிராக களமிறங்க உள்ள இந்திய அணியை தலைமை தாங்கும் கேப்டன் கோலி, தனது 60 வது டெஸ்டில் கேப்டனாக களமிறங்க உள்ளார். இதன் மூலம் இந்திய அணிக்காக 60 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் சாதனையை சமன் செய்ய உள்ளார். அதோடு இந்த டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றால், கோலி (35 *) டெஸ்ட் கேப்டனாக சர் கிளைவ் லாயிட் (36) பெற்ற வெற்றிகளின் எண்ணிக்கையை சமன் செய்வார்.
அதே சமயத்தில், 401 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், 405 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள கர்ட்லி ஆம்ப்ரோஸின் முந்திச்செல்ல வாய்ப்புள்ளது.
ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி
ஐ.சி.சி- யின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற இன்று நடக்கும் 4வது டெஸ்ட் மிக முக்கியான ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலே குறிப்பிட்டது போல, இறுதி போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற, இந்த போட்டியை சமன் அல்லது வெற்றி பெற வேண்டும்.
ஆனால் இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை இந்த போட்டியை வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும். அதோடு அந்த அணி ஏற்கனேவே ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் 4 வது இடத்திற்கு நகர்ந்துள்ளது.
கடைசி போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் 2வது மற்றும் 3வது இடத்தில் உள்ள நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தகுதி பெறும்.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. தொடக்க வீரர் ஜாக் கிராலி 9 ரன்களும், டொமினிக் சிபிளி 2 ரன்களிலும், சிறிது நேரம் தாக்குபிடித்த பேஸ்டோ 28 ரன்களும், கேப்டன் ரூட் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 78 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணியில், பென் ஸ்டோக்ஸ், ஒல்லி போப் இருவரும் சிறிது நேரம் நிலைத்து நின்றனர். இதில் ஒல்லி போப் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். இருவரும் 5-வது விக்கெட்டுக்கு 43 ரன்கள் சேர்த்தனர்.
தொடர்ந்து 6-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய லாரன்ஸ் 48 ரன்களும், அரைசதம் கடந்த பென் ஸ்டோக்ஸ் 55 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதன்பிறகு களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தாதால் இங்கிலாந்து அணி 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆண்டர்சன் 10 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்திய அணி தரப்பில் சுழலில் அசத்திய அக்சார் படேல் 4 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளும், சிராஜ் 2 விக்கெட்டுகளும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 24 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீரர் சுப்மான்கில் ரன் கணக்கை தொடங்காமலே வெளியேறிய நிலையில், ரோகித் சர்மா 8 ரன்களுடனும், புஜாரா 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியாவின் கைவசம் 9 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில், 181 ரன்கள் பின்தங்கியுள்ளது. இந்த போட்டியின் 2-வது நாள் ஆட்டம் நாளை நடைபெறுகிறது.
2ம் நாள் ஆட்டம்
4-வது டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்ட நேரமான இன்று இந்திய அணி நிதான ஆட்டத்தை தொடர்ந்தது. துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா ஒரு முனையிலும், புஜாரா மறுமுனையிலும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நிதானமாக ரன் சேர்த்துக் கொண்டிருந்த புஜாரா (17) ஜாக் லீச் வீசிய 23.6 ஓவரில் எல்பிடபிள்யூ ஆகி ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் கோலி பென் ஸ்டோக்ஸ் வீசிய 26.4 ஓவரில் ஃபோக்ஸின் வசம் கேட்ச் கொடுத்து பூஜ்ய ரன்களில் பெவிலியன் நோக்கி நடந்தார்.
கேப்டன் கோலிக்கு பின்னர் களமிறங்கிய துணை கேப்டன் ரஹானே, விக்கெட் சரிவை தடுக்க மறுமுனையில் இருந்த ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்தார். இங்கிலாந்தின் பந்து வீச்சுக்கு சிறிது தக்குப்பிடித்த ரஹானே 45 பந்துகளில் 4 பவுண்டரிகளை ஓட விட்டு 27 ரன்கள் சேர்த்தார். வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய 37.5 ஓவரில் பென் ஸ்டோக்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் ரஹானே.
அதனை தொடர்ந்து களமிறங்கிய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் மறுமுனையில் இருந்த ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்தார். இன்றைய ஆட்டத்தின் துவக்கம் முதல் களத்தில் இருந்த தொடக்க வீரர் ரோகித் சர்மா அரைசதம் கடந்து விடுவார் என எதிர்பார்க்கையில், பென் ஸ்டோக்ஸ் வீசிய 49.6 ஓவரில் எல்பிடபிள்யூ ஆகி ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய ரோகித் சர்மா 144 பந்துகளில் 7 பவுண்டரிகளை விளாசி 49 ரன்கள் சேர்த்தார்.
ரோகித் சர்மாவின் விக்கெட்டுக்கு பின்னர் களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் 2 பவுண்டரிகளை ஓடவிட்டு ஜாக் லீச் வீசிய பந்தில் ஒல்லி போப்பிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் மறுமுனையில் இருந்த ரிஷப் பந்த்துடன் ஜோடி சேர்ந்தார். நிதானமாக விளையாடிய இந்த ஜோடியில் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் அரைசதம் கடந்திருந்தார். பின்னர் அதிரடி காட்ட துவங்கிய ரிஷப் பந்த் 118 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 13 பவுண்டரிகளை பறக்கவிட்டு, இந்த தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய 84.1 ஓவரில் எல்பிடபிள்யூ ஆகி 101 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.
2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா அணி 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 294 சேர்த்தது. அக்சர் படேல் 11 ரன்களுடனும், அரைசதம் கடந்த வாஷிங்டன் சுந்தர் 60 ரன்களுடனும் களத்தில் இருந்த நிலையில், 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் தொடர்ந்து பேட் செய்த இந்திய அணி 365 ரன்களில் ஆல்அவுட் ஆனது. அரைசதத்தை நெருங்கிய அக்சர் பட்டேல் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசிவரை களத்தில் இருந்த வாஷிங்டன் 96 ரன்கள் எடுத்திருந்தார். தன் மூலம் இந்திய அணி 160 ரன்கள் முன்னிலை பெற்றது. இங்கிலாந்து அணி தரப்பில், பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளும், அண்டர்சன் 3 விக்கெட்டுகளும், லீச் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
தொடர்ந்து தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் கிரௌலி, சிபிலி மற்றும் பேர்ஸ்டோ சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ரூட் விக்கெட் சரிவை மீட்க சிறிது நேரம் தாக்குப்பிடித்தார். ஆனால் அவரும் அஸ்வின் வீசிய 25.1 ஓவரில் அவுட் ஆக்கினார். அவருக்கு மறுமுனையில் இறங்கிய ஒல்லி போப் மற்றும் பென் ஸ்டோக்ஸ் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அந்த அணியில் சிறப்பாக ஆடிய டேனியல் லாரன்ஸ்(50) 6 பவுண்டரிகளை ஓடவிட்டு அரைசதம் கடந்தார். அஸ்வின் வீசிய 54,5 ஓவரில் டேனியல் அவுட் ஆகி வெளியேற 2வது இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. இதையடுத்து இந்திய அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய அஸ்வின் மற்றும் அக்சர் படேல் தலா 5 விக்கெட்டுகளை விழ்த்தியுள்ளனர்.
India on ????
Virat Kohli and Co. are No.1 in the @MRFWorldwide ICC Test Team Rankings ???? pic.twitter.com/uHG4q0pUlj
— ICC (@ICC) March 6, 2021
இந்த தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளதால், ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” t.me/ietamil