Cricket news in tamil: இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-2 என்ற கணக்கிலும் இந்திய அணி கைப்பற்றியது. இந்த நிலையில் இவ்விரு அணிகளும் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் பகல்-இரவு ஆட்டமாக நடைபெறுகின்றன. மேலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் பூட்டப்பட்ட மைதானத்தில் போட்டிகள் நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா பேட்டிங்
இன்று துவங்கிய முதலாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய இந்திய அணியின் ரோகித் சர்மா மற்றும் தவான் அணிக்கு நல்ல துவக்கத்தை கொடுத்தனர். டி-20 தொடரில் சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா இந்த போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 42 பந்துகளில் 4 பவுண்டரிகளை ஓட விட்ட ரோகித் சர்மா இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் வீசிய பந்தில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய அணியின் கேப்டன் கோலி மறுமுனையில் இருந்த தவானுடன் ஜோடி சேர்ந்தார். மிகச் சிறப்பாக விளையாடிய இந்த ஜோடியில் துவக்க தவான் தனது 31வது ஒரு நாள் போட்டி அரைசத்தை பதிவு செய்தார்.
மறுமுனையில் இருந்து இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை திணறடித்த கேப்டன் கோலி 60 பந்துகளில் 6 பவுண்டரிகளை ஓட விட்டு, தனது 61வது ஒரு நாள் போட்டி அரைசத்தை பதிவு செய்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய கேப்டன் கோலி 32.1 ஓவரில் மார்க்வுட் வீசிய பந்தில் மொயீன் அலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 6 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, அணியின் விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் களமிறங்கினார்.
டி-20 தொடரில் சரியாக சோபிக்காத ராகுல், பல விமானர்சனங்களை சந்தித்திருந்தார். அனைத்திற்கும் முற்று புள்ளி வைக்கும் விதமாக இந்த போட்டியில் சிறப்பாக ஆடினார். அவரோடு மறுமுனையில் இருந்த துவக்க வீரர் தாவன், துவக்கம் முதல் நிதானமாகவும், அவ்வப்போது அதிரடியும் காட்டினார். தனது 18 ஒரு நாள் போட்டி சதத்தை பதிவு செய்யவார் என்று நினைக்கையில், பென்ஸ் டோக்ஸ் வீசிய 38.1 ஓவரில் மோர்கன் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
தவானை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் வீரர் ஹார்டிக் பாண்டியா 1ரன் மட்டும் எடுத்து, வந்த வேகத்தில் பெவிலியன் நோக்கி நடந்தார். தொடர்ந்து களமிறங்கிய ஹார்டிக் பாண்டியாவின் அண்ணன் க்குருனல் பாண்ட்யா, மறுமுனையில் இருந்த ராகுலுடன் ஜோடி சேர்ந்தார். அறிமுகமாகிய முதல் போட்டியிலே சிறப்பாக விளையாடிய க்குருனல், ஒரு நாள் போட்டியில் தனது முதல் அரைசத்தை பதிவு செய்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இந்த ஜோடியில் க்குருனல் பாண்ட்யா 58 ரன்களுடனும், கே.எல். ராகுல் 62 ரன்களுடனும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். எனவே இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 317 ரன்களை சேர்த்தது.
இங்கிலாந்து அணியில் சிறப்பாக பந்து வீசிய பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டுகளையும், மார்க்வுட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இங்கிலாந்து அணிக்கு 318 ரன்கள் இலக்கு
300 பந்துகளில் 318 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு நல்ல துவக்கம் கிடைத்தது. அந்த அணியின் துவக்க வீரர்கள் ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் முதல் பத்து ஓவர்களில் வீசப்பட்ட பந்துகளை மைதானத்தின் அனைத்து மூலைகளுக்கும் பறக்க விட்டனர். துவக்கம் முதலே சிறப்பாக விளையாடிய ஜேசன் ராய் 35 பந்துகளில் 1 சிக்ஸர் மற்றும் 7 பவுண்டரிகளை அடித்து, 46 ரன்கள் சேர்த்திருந்தார், இந்தியாவின் பிரசித் வீசிய 14.2 ஓவரில் மாற்று வீரராக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் 1ரன்னில் ஆட்டமிழந்து, பெவிலியன் நோக்கி நடந்தார். பின்னர் களமிறங்கிய கேப்டன் மோர்கன் 22 ரன்களிலும், விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் 2 ரன்களிலும், சாம் பில்லிங்ஸ் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். சிறிது நேரம் களத்தில் தாக்குப்பிடித்து அதிரடி காட்டிய மொயீன் அலி 30 ரன்னில் ஆட்டமிழக்க, மறுமுனையில் இருந்த சாம் கரன் ஒரு பவுண்டரியை ஓட விட்டு 12 ரங்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய டாம் கரன், ஆடில் ரஷீத், மற்றும் மார்க்வுட் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. 42.2 ஓவர்களிலே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த அந்த அணி 251 ரன்கள் மட்டுமே சேர்த்தது. எனவே இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய அறிமுக வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளையும், சர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகளையும், க்குருனல் பாண்டியா 1 விக்கெட்டையும் எடுத்தனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.