Cricket news in Tamil: இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 4 டெஸ்ட் போட்டிகளும், 5 டி-20 போட்டிகளும், 3 ஒரு நாள் போட்டிகளும் கொண்ட தொடர்கள் இந்தியாவில் நடைபெற உள்ளன. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. இதையடுத்து இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்வதற்காக இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் வீரர் ஹர்திக் பாண்டிய நேற்று முன் தினம் சென்னை வந்து சேர்ந்தார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ள வந்துள்ளதால், சென்னையில் நடக்கும் டெஸ்டில் விளையடுவாரா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. அதோடு அவரது உடற்தகுதி எப்படி உள்ளது என்று சோதித்த பின்னரே விளையாடுவார் என்றும் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டி -20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்த ஆண்டு இந்தியா நடத்த திட்டமிட்டுள்ளது. எனவே இந்த போட்டிகளில் ஹர்திக் பாண்டிய கண்டிப்பாக இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. அதை கருத்தில் கொண்டுள்ள இந்திய அணி நிர்வாகம், மிடில்- ஆடரில் சிறப்பாக விளையாடும் ஆல் - ரவுண்டர் ஹர்திக் பாண்டியவுக்கு இந்த டெஸ்ட் தொடர்களில் இருந்து ஒய்வு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அதோடு வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கும் ஓய்வு வழங்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"டெஸ்ட் தொடரில் பாண்டிய தேர்வு செய்யப்பட காரணாம், அவரது முன்னேற்றத்தை உன்னிப்பாகக் கண்காணிக்கவே. இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு தயாராக இருக்க வேண்டும் என்று அணி நிர்வாகம் விரும்புகின்றது. அதோடு இந்த ஆண்டில் இனி டெஸ்ட் கிரிக்கெட் இல்லை, எனவே இந்த வழியில், அவரது பந்துவீச்சையும் கண்காணிக்க முடியும் என்பதாலும் அவர் சென்னை வரவழைக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டில் டி-20 உலக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடக்க இருப்பதாலும் ஹர்திக் பாண்டிய மற்றும் ஜஸ்பிரிட் பும்ராவை சரியான தருணத்தில் பயன்படுத்த இந்திய அணியின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது" என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது பாண்ட்யா மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி 20 போட்டிகளில் சிறப்பாக விளையாடி இருந்தார். வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 3 பார்மெட்டுகளிலும் சிறப்பாக விளையாட கூடியவர். எனவே இந்த இரு வீரர்களையும் பெரிய போட்டிக்காக காத்திருப்பில் வைத்துள்ளது இந்திய அணி.
இந்திய டெஸ்ட் அணியைப் பொறுத்தவரை, மிடில் ஆர்டரில் அஜிங்க்யா ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷாப் பந்த், மற்றும் மாயங்க் அகர்வால் போன்ற வீரர்கள் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் ஆல்ரவுண்டர்களான ஆக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஆர் அஸ்வின் ஆகியோர் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் இன்னும் முழு உடற்தகுதி பெறவில்லை, எனவே அவர்கள் இந்த தொடரில் இடம் பெறுவார்களா என்பதில் சந்தேகமே உள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil