Ishan Kishan tamil news: இந்தியா சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டி- 20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடந்த 2 வது போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. இந்த போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய தொடக்க வீரர் இஷான் கிஷான் தனது முதல் போட்டியிலே அரைசதம் கடந்தார். இதனால் அறிமுகமாகிய முதல் போட்டியிலே அரைசதம் கடந்த 2வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். முதல் வீரராக அஜின்கியா ரஹானே உள்ளார்.
நேற்றைய ஆட்டத்தில் துவக்க வீராக கே.எல்.ராகுல் பூஜ்ய ரன்னில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். மறுமுனையில் தன்னம்பிக்கையுடன் இருந்த தொடக்க வீரர் இஷான் கிஷான் கேப்டன் கோலிவுடன் ஜோடி சேர்ந்தார். இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்சார் வீசிய பந்தில் தனது முதல் பவுண்டரியை ஓட விட்ட இஷான் கிஷான், அதன் பிறகு ஆட்டம் சூடுபிடிக்கவே 5 பவுண்டரிகளையும், 4 சிக்ஸர்களையும் பறக்க விட்டார்.
இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை தும்சம் செய்த இஷான், அந்த அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களாகிய டாம் கர்ரன், பென் ஸ்டோக்ஸ், மற்றும் ரஷீத் ஆகியோரின் பந்து வீச்சை சிதறடித்தார். இஷான் 41 ரன்கள் இருந்த போது, லாங்-ஆனில் அவர் அடித்த பந்து பென் ஸ்டோக்ஸின் கைகளில் சிக்கி தப்பித்தது. இருப்பினும், 32 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்த இஷான். ரஷீத்தின் சுழலில் சிக்கி எல்பிடபிள்யூ ஆனார்.
ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக ஆடியதால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இஷான், தனது முதல் போட்டியிலே அசத்தி மீண்டும் கவனம் பெற்றுள்ளார்.
இந்த போட்டியில் அதிரடி காட்டிய கேப்டன் கோலி 73 ரன்கள் சேர்த்து, டி- 20 போட்டிகளில் 3000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil