Cricket news in tamil: உலக கிரிக்கெட் அரங்கில் மகத்தான சாதனைகளை படைத்த கேப்டன்களில் ஒருவராக வலம் வருபவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. கடந்த 2004ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமாகிய இவர், 2007ம் ஆண்டு நடந்த 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் அணியை வழிநடத்தி, கோப்பை வென்றார். தொடர்ந்து கேப்டன் பொறுப்பை தக்கவைத்துக்கொண்ட இவர் உலகக் கோப்பை முதல் அனைத்து தர போட்டிகளின் கோப்பைகளையும் இந்திய அணிக்காக வென்று தந்துள்ளார்.
ஆட்ட நுணுக்கங்களில் கை தேர்ந்தவரான தோனி, ஸ்டெம்பிற்கு பின்னால் இருந்து கொண்டு மிகக் கச்சிதமாக அணியை வழிநடத்துவார். அதை நாம் பல போட்டிகளில் பார்த்திருக்க கூடும். அதோடு உலகிலே தலைசிறந்த விக்கெட் கீப்பர் என்ற பெருமையை கொண்ட வீரராகவும் இவர் உள்ளார். இவரின் அசாத்தியமான ஸ்டெம்பிங்கை பார்த்த உலகின் முன்னணி நட்சத்திரங்கள் இவரை புகழ்ந்து தள்ளியுள்ளனர் என்றால் மிகையாகாது.
தோனியின் இந்த விக்கெட் கீப்பிங் திறனை வெளிக்கொண்டு வர தான் தொடர்ந்து போராட வேண்டி இருந்ததாகவும், அதற்காக முன்னாள் கேப்டன் கங்குலியை சமாதானப்படுத்த 10 நாட்கள் ஆனது எனவும் முன்னாள் இந்திய அணியின் தேர்வாளர்கள் தலைவர் கிரண் மோர் தெரிவித்துள்ளார்.

“2003-04ல் நடந்த துலீப் டிராபி இறுதிப் போட்டி வடக்கு மண்டல கிரிக்கெட் அணிக்கு எதிராக நடந்தது. அப்போது கிழக்கு மண்டல விக்கெட் கீப்பர் டீப் தாஸ்குப்தாவுக்கு பதிலாக தோனியை அனுமதிக்குமாறு அப்போதைய இந்திய கேப்டன் மற்றும் தற்போதைய பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியை நான் சமாதானப்படுத்த 10 நாட்களுக்கு மேல் ஆகியது.

மேலும், இந்திய அணிக்காக நாங்கள் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனைத் தேடிக்கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் போட்டியின் வடிவம் மாறியிருந்தது. எனவே நாங்கள் ஒரு பவர்-ஹிட்டரைத் தேட வேண்டியதாயிற்று. 6 அல்லது 7 வீரராக களமிறங்கும் அந்த வீரர் 40-50 ரன்களை விரைவாகப் பெறக் கூடியவராக இருக்க வேண்டும் என விரும்பினோம்.
அணியில் இருந்த ராகுல் டிராவிட் 75 ஒருநாள் போட்டிகளில் விக்கெட் கீப்பராக விளையாடினார், மேலும் அவர் 2003 உலகக் கோப்பையிலும் விளையாடினார். எனவே, நாங்கள் ஒரு புதிய விக்கெட் கீப்பருக்காக ஆசைப்பட்டோம்.” என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” (https://t.me/ietamil)