Sourav Ganguly Tamil News: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி உலகின் முன்னணி கேப்டன்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் கடந்த 2017ம் ஆண்டு இந்திய அணியின் டி20 கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகிய பிறகு கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். தற்போது வரை இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் ஆகிய மூன்று வகையான வடிவ போட்டிகளின் கேப்டனாக நீடித்து வருகிறார்.
கேப்டன் விராட் கோலி சில வாரங்களுக்கு முன்னர் தற்போது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு தான் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இது பலருக்கும் அதிர்ச்சியளித்திருந்தது. எனினும், கோலி ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தான் கேப்டனாகத் தொடர்வேன் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில், கோலி டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியது தொடர்பாக பேசியுள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் (பிசிசிஐ) தலைவர் சவுரவ் கங்குலி, "நடப்பு உலகக் கோப்பைக்குப் பிறகு டி 20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதற்கான விராட் கோலியின் முடிவு அவரது "சொந்த முடிவு". இந்திய கிரிக்கெட் வாரியம் எந்த வித அழுத்தமும் அவருக்கு கொடுக்கவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.
‘ஆஜ் டாக்’ செய்தி நிறுவனத்திற்கு கங்குலி அளித்துள்ள பேட்டியில், "கோலி டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து விலக எடுத்த முடிவு எனக்கு ஆச்சரியம் அளித்தது. இங்கிலாந்து தொடருக்குப் பிறகு அவர் இந்த முடிவை எடுத்தார். இது அவரின் சொந்த முடிவு. கோலிக்கு எங்களது தரப்பில் இருந்து எந்த அழுத்தமும் கொடுக்கபடவில்லை. இது தொடர்பாக அவரிடம் யாரும் பேசவில்லை. நாங்கள் ஒருபோதும் அப்படி செய்ததது கிடையாது. நானும் ஒரு வீரராக இருந்தவன், நான் ஒருபோதும் அப்படிச் செய்யமாட்டேன், ”என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.