Varun Chakravarthy Tamil News: இலங்கை சென்றுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி-20 தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ள இந்திய அணி நேற்று முன் தினம் நடந்த முதல் டி-20 போட்டியில் 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், நேற்று நடந்த 2வது டி-20 போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. எனவே தொடர் 1-1 என்று சமநிலையில் உள்ளது. இந்த போட்டியில் முதலில் களம் இந்திய அணி வெறும் 5 பேட்ஸ்மேன்கள் உடன் களமிறங்க வேண்டிய கட்டாயத்தில் விளையாடியதால் 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் குவித்தது. இதில் கேப்டன் தவான் அதிகபட்சமாக 40 ரன்கள் குவித்தார். அவரைத் தவிர மற்ற பேட்ஸ்மென்கள் யாரும் பெரிதும் சோபிக்கவில்லை.

இந்த எளிய இலக்கை துரத்த களம் கண்ட இலங்கை அணி எளிதில் எட்டி விடும் என பலர் எதிர்பார்த்திருந்த நிலையில், ஆட்டத்தின் கடைசி இறுதி ஓவரில் வீசப்பட்ட 4-வது தான் அந்த அணி வென்றது. இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சு அந்த அணியை இறுதி வரை போராட வைத்தது என்றால் மிகையாகாது.
இந்திய அணி சார்பாக 6 பந்துவீச்சாளர்கள் களமிறக்கப்பட்டாலும், நவ்தீப் சைனிக்கு பந்து வீச வாய்ப்பு வழங்கப்படவில்லை. இருப்பினும், பந்து வீசிய மற்ற 5 பந்து வீச்சாளர்களும் சிறப்பாக பந்து வீசி இலங்கை அணிக்கு நெருக்கடி கொடுத்தனர். இதில் மிகவும் சிறப்பாக பந்து வீசி அசத்தி இருந்தார் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி.
சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி இலங்கை அணியை கிட்டத்தட்ட தனது மாயாஜால பந்துவீச்சின் மூலம் திணறடித்து நெருக்கடி கொடுத்தார். முதல் ஓவரின் முதல் 1 பவுண்டரியை வழங்கிய அவர், அதன் பிறகு வீசிய பந்துகளை மிகவும் துல்லியமாக வீசினார். மேலும் அவருக்கு வழங்கப்பட்ட 4 ஓவர்களில் 1 விக்கெட்டை வீழ்த்தி 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். அதோடு அவர் வீசிய 4 ஓவர்களில் ஒரு ஓவருக்கு 5-க்கும் குறைவான ரன்களையே வழங்கியிருந்தார்.

வருண் சக்கரவர்த்தியின் இந்த மாயாஜால பந்துவீச்சு குறித்து பல முன்னாள் வீரர்கள் புகழ்ந்துள்ளனர். இவரின் சிறப்பான பந்து வீச்சை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு நல்ல வரவேற்பை அளிப்பதோடு, வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.