Cricket News In Tamil: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இதில் இந்திய அணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றது. இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியின் மூத்த சுழற் பந்து வீச்சாளர் நேதன் லியோன் மிக சிறப்பாக பந்து வீசி அசத்தினார். இவர் பிரிஸ்பேனில் இந்திய அணிக்கு எதிராக நடந்த இறுதி டெஸ்ட் போட்டியில் களமிறங்கியதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளை விளையாடிய வீரர் எனும் மைல் கல்லை எட்டி இருந்தார். அதோடு 399 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தார். 400 விக்கெட்டுகளை எடுப்பார் என பலர் நம்பிக்கை வைத்திருந்த நிலையில் அந்தப்
போட்டியை இந்திய அணி வென்று அவருக்கு ஏமாற்றத்தை தந்தது.
ஸ்போர்ட்ஸை ஸ்போர்ட்டிவாக எடுத்துக்கொள்ளும் நேதனுக்கு, அவர் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, இந்திய அணியின் வீரர்கள் அனைவரும் கையொப்பம் (சைன்) இட்ட ஜெர்சியை இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் அஜின்கியா ரஹானே அவருக்கு வழங்கினார். இந்த புகைப்படத்தை நேதன் லியோன், தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதோடு சில புகைப்படங்களையும் பதிவிட்டு பின்வருமாறு கூறியுள்ளார்:
"ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடுவதும், பச்சை நிற தொப்பியை அணிவதும் என்னுடைய நீண்ட நாள் கனவு. ஆஸ்திரேலிய அணிக்காக 99 - க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றது. இந்திய அணிக்கும், அந்த அணியை வழி நடத்திய கேப்டன் அஜின்கியா ரஹானேவிற்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதோடு இந்திய அணியின் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பிற்கும், நீங்கள் வழங்கியுள்ள கையொப்பம் (சைன்) இட்ட ஜெர்சிக்கும் எனது மனமார்ந்த நன்றி" என்று கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணியில் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்தோர் பட்டியில், ஷேன் வார்ன் (708), க்ளென் மெக்ராத் (563)
ஆகியோருக்குப் பிறகு மூன்றாம் இடத்தில் நேதன் லியோன் உள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil