IPL 2023, Chennai Super Kings Tamil News: 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டிகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் நடக்கிறது. இதையொட்டி 10 அணிகள் மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்துக் கொண்டன. 85 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்ட வீரர்களுக்குரிய இடத்தை நிரப்புவதற்காக ஐ.பி.எல். வீரர்களுக்கான மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.
இந்த ஏலத்திற்கு முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 வீரர்களை விடுவிப்பதாகவும், 18 வீரர்கள் தக்கவைப்பதகாவும் தெரிவித்தது. பிறகு நடைபெற்ற மினி ஏலத்தில் 7 வீரர்களை வாங்கியது. இதில், இங்கிலாந்து ஆல்ரவுண்டர் வீரர் பென் ஸ்டோக்ஸை 16.25 கோடி ரூபாய்க்கும், இந்திய வீரர் அஜின்கியா ரகானேவை 50 லட்சத்துக்கும் வாங்கியது. இன்னும் சில வீரர்களை அவர்களின் அடிப்படை விலைக்கு வாங்கியது.
'சி.எஸ்.கே- வில் ஒரு தமிழக வீரர் கூட இல்லை' - ரசிகர்கள் ஆதங்கம்…
இந்நிலையில், 25 பேர் அடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு கிரிக்கெட் வீரர் கூட இடம்பெறவில்லை என கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களின் ஆதங்கத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் இருந்து இந்திய அணிக்காக விளையாடும் முக்கிய வீரர்களான ரவிச்சந்திரன் அஸ்வின், தங்கராசு நடராஜன், தினேஷ் கார்த்திக், விஜய் ஷங்கர் என யாருமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஏன் ஏலம் எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இது தொடர்பாக ரசிகர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "சிஎஸ்கே அல்லது ஐபிஎல் பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால் முதல் முறையாக தமிழக பிளேயர் சிஎஸ்கே அணியில் இல்லாதது, சிஎஸ்கே அல்லது தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் அல்லது இரண்டிலும் ஏதோ தவறு இருப்பதைக் குறிக்கிறது." என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொரு ரசிகர் தனது பதிவில், சிஎஸ்கே அணியில் ஒரு தமிழக வீரர் கூட தேர்வு செய்யாதது மிகவும் வருத்தம் அளிக்கிறது. மற்ற அணிகளுக்காக ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடி வரும் தமிழக வீரர்களுடன் உங்களுக்கு என்ன பிரச்சனை? ஏன் இப்படி ?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர், தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் மற்றும் சிஎஸ்கே நிர்வாகம் எப்போதும் தமிழக வீரர்களைத் தேர்ந்தெடுப்பதைத் தவிர்க்கின்றன. அதனால் சிஎஸ்கே-வை ஆதரிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. சென்னை என்ற பெயரை மட்டும் வைத்து நாம் ஆதரிக்க முடியாது.
சிஎஸ்கே தமிழக வீரர்கள் யாரையும் தேர்வு செய்ய முயற்சிக்கவில்லை, மேலும் அவர்கள் பல வட இந்திய வீரர்களுக்கு வாய்ப்புகளை வழங்குகிறார்கள். அவமானம்" என்று தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஐபிஎல் 2023க்கான சி.எ.ஸ்கே முழு அணி வீரர்கள் பட்டியல்:
அம்பதி ராயுடு, தீபக் சாஹர், டெவோன் கான்வே, டுவைன் பிரிட்டோரியஸ், மகேஷ் தீக்ஷனா, மதீஷா பத்திரனா, மிட்செல் சான்ட்னர், மொயீன் அலி, எம்எஸ் தோனி, முகேஷ் சவுத்ரி, பிரசாந்த் ரவிந்தரா ஹங்கேர், ராஜ்கர் சோலங்கி, ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், சிவம் துபே, சிமர்ஜீத் சிங், சுப்ரான்சு சேனாபதி, துஷார் தேஷ்பாண்டே, பகத் வர்மா, அஜய் மண்டல், கைல் ஜேமிசன், நிஷாந்த் சிந்து, ஷேக் ரஷீத், பென் ஸ்டோக்ஸ், அஜிங்க்யா ரஹானே.
ஐபிஎல் தொடரில் விளையாடும் தமிழக வீரர்கள் பட்டியல்:
குஜராத் டைட்டன்ஸ் அணி: விஜய் சங்கர், சாய் கிஷோர், சாய் சுதர்ஷன்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ஜெகதீசன் நாராயண், வருண் சக்ரவர்த்தி
ராஜஸ்தான் ராயல்ஸ்: முருகன் அஸ்வின், ரவிச்சந்திரன் அஸ்வின்
சன் ரைசர்ஸ் ஐதராபாத்: தங்கராசு நடராஜன், வாஷிங்டன் சுந்தர்
பஞ்சாப் கிங்ஸ்: ஷாருக் கான்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ: தினேஷ் கார்த்திக்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil