Cricket news in tamil: விஜயஹசாரே 50 ஓவர் கிரிக்கெட் போட்டி மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் இன்று வியாழக்கிழமை நடந்த போட்டியில் மும்பை மற்றும் புதுச்சேரி அணிகள் மோதிக்கொண்டன. மிக விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 233 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.
முதலில் களமிறங்கிய மும்பை அணி தொடக்க ஆட்டக் காரர் ஜெய்ஸ்வால், ஆட்டத்தின் தொடக்கத்திலே பவுண்டரியை பறக்க விட்டார். அதிரடியாக ரன்களை சேர்ப்பார் என்று நினைக்கையில் சாகர் திரிவேதி வீசிய பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். அவரோடு மறுமுனையில் நின்ற பிருத்வி ஷா பின்னர் களமிறங்கிய விக்கெட் கீப்பர் தரேவுடன் கை கோர்த்தார். அணிக்கு சிறப்பான துவக்கம் கொடுத்த இந்த ஜோடி சிக்ஸர்களையும் பவுண்டரிகளையும் பறக்கவிட்டது. சிறப்பாக ஆடி அரைசதம் கடந்திருந்த தாரா, எஸ் எஸ் குமார் வீசிய 29.5 ஓவரில் அவுட் ஆகி வெளியேறினார்.
அதன் பின் களமிறங்கிய சூர்ய குமார் யாதவ் மறுமுனையில் நின்ற பிருத்வி ஷாவுடன் ஜோடி சேர்ந்தார். நேர்த்தியான அதிரடி காட்டிய இந்த ஜோடி 47 ஓவர்களில் 412 ரன்களை சேர்த்தது. அதிரடி காட்டிய சூர்ய குமார் யாதவ் 58 பந்துகளில் 4 சிக்ஸர்களையும், 22 பவுண்டரிகளையும் பறக்கவிட்டு 133 ரன்களை சேர்த்திருந்தார். பின்னர் பங்கஜ் சிங் வீசிய 47 ஓவரில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த பிருத்விஷா 152 பந்துகளில் 5 சிக்ஸர், 31 பவுண்டரிகளை பறக்கவிட்டு 227 ரன்கள் சேர்த்திருந்தார். எனவே மும்பை அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 457 ரன்களை சேர்த்தது.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய புதுச்சேரி அணிக்கு சரியான துவக்கம் கிடைக்காமல் தடுமாறியது. அந்த அணியின் கேப்டன் தாமோதரன் ரோஹிதை(63) தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரங்களில் அவுட் ஆகி வெளியேறினர். எனவே அந்த அணி 38 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 224 ரன்கள் சேர்த்து இருந்தது.
அபாரமாக பந்து வீசிய மும்பை அணியின் பிரசாந்த் சோலங்கி 5 விக்கெட்டுகளையும், சர்துல் தாக்கூர், மற்றும் துஷார் தேஷ்பாண்டே தலா 2 விக்கெட்டுகளையும், ஜெய்ஸ்வால் 1 விக்கெட்டையும் எடுத்தனர்.
இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய பிருத்விஷா (227), விஜய்ஹசாரே போட்டியில் அதிகபடச்ச ரன்னாக இருந்த சஞ்சு சாம்சனின் (212) ஸ்கோரை முறியடித்து சாதனை படைத்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil