Cricket news in tamil: இந்திய கிரிக்கெட் அணியில் கேப்டனாக நீடிப்பது ஒரு சுலபமான காரியம் அல்ல. அதுவும் 3 பார்மெட் போட்டிகளுக்கும் தலைமை தங்கி கோப்பையை வெல்வது என்பது மிகவும் சாவல் நிறைந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தற்போது உள்ள இந்திய கிரிக்கெட் அணியை கேப்டன் கோலி மிக திறமையுடனே வழிநடத்தி வருகிறார். இருப்பினும், அவர் மீது தொடர்ந்து பல விமர்சனங்கள் எழுந்த வண்ணமே உள்ளது. குறிப்பாக ஐசிசி நடத்திய எந்தவொரு பெரிய தொடர்களிலும் இந்திய அணிக்காக அவர் எந்த கோப்பையையும் பெற்றுத் தரவில்லை என்று கூறுகிறார்கள்.
சமீபத்தில் ஐசிசி நடத்திய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்ட இந்திய அணி படு மோசமான தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் இந்த மோசமான தோல்வி பல இந்திய ரசிகர்களுக்கு அதிருப்தியை அளித்துள்ள நிலையில், பலர் தாறுமாறாக விமர்சனம் செய்து வருகின்றனர். அது மட்டுமின்றி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 3 பார்மெட் கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக இருக்க கூடாது என்றும் ஒரு சில பார்மெட்களில் கோலியை தாண்டி மற்ற வீரர்களை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர் இணையவாசிகள்.
இந்நிலையில், கேப்டன் கோலி தலைமையில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதலில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. இந்த தொடரை ஒருவேளை இந்திய அணி இழக்கும் பட்சத்தில் நிச்சம் அணிக்கான கேப்டன் நிச்சயம் மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. எனவே, கேப்டன் கோலிக்கு பிறகு யார் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்கிற கேள்வி தற்போது அதிகரித்து வருகிறது.
இணைய பக்கங்களில் வைரலாகி வரும் இந்த கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக பேசியுள்ள இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரரும், முன்னாள் வீரருமான யுவராஜ் சிங், கேப்டன் கோலிக்கு பிறகு இந்திய அணியை வழிநடத்த இளம் வீரர் ரிஷப் பண்ட் தான் சரியான ஆள்' என குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து யுவராஜ் சிங் பேசுகையில், "ரிஷப் பண்ட் ஒரு மிகச் சிறந்த வீரர். அவருடைய திறமை தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் வெளிப்பட்டு வருகிறது. டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் போட்டியின் முடிவை மாற்றும் அளவிற்கு நுணுக்கமாக விளையாடி வருகிறார்.
பேட்டிங்கில் மட்டுமின்றி போட்டி முழுவதுமே அவர் நல்ல திறனுடன் செயலாற்றி வருகிறார். கேப்டனாக அணியை வழிநடத்தும் திறமை அவரிடம் உள்ளது என நான் கருதுகிறேன். இதனால் நிச்சயம் விரைவில் தொடர்ந்து அவரே இந்திய அணியின் கேப்டனாக வருவார்" என்று கூறியுள்ளார்.
யுவராஜ் சிங்கின் இந்த கருத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள இணைய வாசிகள் இதை சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து வைரலாக்கி வருகின்றனர். தவிர, ரிஷப் பண்ட் பெயரையும் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரிஷப் பண்ட் அந்த அணியை சிறப்பாக வழிநடத்தி பட்டியலில் முதலிடம் பிடிக்க செய்துள்ளார். மேலும், கொரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ள இந்த தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் வருகிற செப்டம்பர் அக்டோபர் மாதத்தில் நடைபெற உள்ளது. இதிலும் அவர் தொடர்ந்து சிறப்பாக செயல்படும் பட்சத்தில் நிச்சம் அடுத்த கேப்டனுக்கான வாய்ப்பை தட்டிச் செல்ல வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.