virat kohli tamil news: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி (33) உலகின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராக உள்ளார். மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக இருக்கும் இவர் தனது பணிச்சுமையை குறைக்கும் வண்ணம் விரைவில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான கேப்டன் பொறுப்பை துறக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
கேப்டன் விராட் கோலி மூன்று வகையான கிரிக்கெட்டிலும் தொடர்ந்து சிறந்த கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இவரது தலைமையில் களமிறங்கிய இந்திய அணி 95 போட்டிகளில் விளையாடி 65-ல் வெற்றியும் 27-ல் தோல்வியும் அடைந்துள்ளது. 1 போட்டி டிராவில் முடிந்துள்ளது. 2 போட்டிகளில் முடிவு இல்லை. இருப்பினும், கேப்டன் கோலியால் இதுவரை ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்ல முடியவில்லை என்ற குற்றச்சாட்டு நீடித்து வருகிறது.
தவிர கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அவர் சதம் அடிக்காமல் விளையாடி வருவது அவரது ரசிகர்கள் மத்தியில் மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, தனது பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தும் நோக்கில் விராட் கோலி இத்தகைய முடிவு எடுக்க இருப்பதாக பிரபல ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், கேப்டன் கோலி டெஸ்ட் அணியின் கேப்டனாக தொடர்ந்து நீடிப்பார் எனவும் தகவல்கள் கூறுகின்றன.
கேப்டன் கோலி பதவி விலகும் பட்சத்தில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான போட்டிக்கான கேப்டன் பொறுப்பு ரோகித் சர்மாவுக்கு வழங்கப்பட இருப்பதாக பிசிசிஐ வட்டார தகவல் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடக்க ஆட்டக்காரரான ரோகித்சர்மா ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார். மேலும், அந்த அணிக்காக 5 முறை கோப்பையை வென்றவர் என்ற பெருமையை பெற்று உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகுவது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்காத நிலையில், டி20 உலககோப்பைக்கு பின்னர் அறிவிப்புகள் வெளிவரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பை விராட் கோலியே வெளியிடுவார் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகுவது தொடர்பான வதந்தியை இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது. இது பிசிசிஐயின் பொருளாளர் அருண் துமால், ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், "இவையெல்லாம் அபத்தமானவை. அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை. ஊடகங்களில் மட்டுமே இவை விவாதிக்கப்பட்டு வருகின்றன. டெஸ்ட் மற்றும் ஒருநாள்,20 ஓவர் அணிகளுக்குத் தனித்தனி கேப்டன்களை நியமிப்பது பற்றி இந்திய கிரிக்கெட் விவாதிக்கவில்லை. எல்லாவிதமான போட்டிகளிலும் விராட் கோலியே கேப்டனாக நீடிப்பார்" என்று விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.