Cricket news in tamil: இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரர்களில் ஒருவராக வலம் வந்தவர் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக். தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் கடந்த 2004 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகினார். பல கேப்டன்களின் தலைமையின் கீழ் இவர் விளையாடி இருந்தாலும், தோனியின் வருகைக்கு பிறகு அணியில் நிரந்தர இடம் கிடைக்கமால் தவித்து வந்தார்.
கடந்த 2019ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பையில் தொடரில் இடம்பெற்று விளையாடினார். அதன் பிறகு இந்திய அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார். இருப்பினும் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் தனது திறமையை நிரூபித்துக் கொண்டே இருந்தார். தற்போது ஐபிஎல் தொடருக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடி வரும் இவர், சில வருடங்கள் அந்த அணியை சிறப்பாக வழிநடத்தினார்.
இன்று தனது 36 வது பிறந்த நாளை கொண்டாடி வரும் தினேஷ் கார்த்திக், அவரது கிரிக்கெட் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட வீடியோ இணைய பக்கங்களில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரான ரோகித் சர்மா அவரது முதல் சர்வதேச அரை சதத்தை தனது பேட் மூலம் தான் பதிவு செய்தார் என்று வெளிப்படுத்தி இருந்த வீடியோ இணைய பக்கங்களில் பெரிதும் பகிரப்பட்டு வருகிறது.
கடந்த 2007ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பை தொடரின் ஒரு போட்டியில், இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்பி இருந்தார். இதே போட்டியில் களம் கண்ட ரோகித் சர்மா 40 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்களுடன் அரைசதத்தை கடந்திருந்தார்.
இந்த சம்பவத்தை நினைவுகூர்ந்திருந்த தினேஷ் கார்த்திக், "ரோகித் சர்மா அவரது முதல் அரை சதத்தை எனது பேட்டில் பதிவு செய்ததை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நான் அந்த போட்டியில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பியதும் என்னுடைய பேட்டை பார்த்து திட்டினேன். அதற்கு ரோகித் சர்மா என்னிடம், 'இந்த பேட்டில் என்ன குறை இருக்கிறது' இந்த பேட் நன்றாக இல்லை என நீங்கள் நினைக்கிறீர்களா' என்னிடம் கொடுங்கள் என்று எனது பேட்டை வாங்கிக்கொண்டு மைதானத்திற்கு பேட்டிங் செய்ய களமிறங்கினார். மேலும் தென்னாப்பிரிக்க அணியின் பந்து வீச்சை தும்சம் செய்த அவர் இந்திய அணி 153 ரன்கள் குவிக்க உதவினார்" என்று கூறினார்.
இந்த போட்டியில் 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 116 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " (https://t.me/ietamil)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.