jasprit bumrah Tamil News: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் தொடர் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் ட்ரா ஆன நிலையில் 2வது டெஸ்ட்டில் இந்திய அணி வெற்றியை ருசித்தது. ஆனால் தொடர்ந்து நடந்த 3வது டெஸ்டில் இங்கிலாந்து அணி வென்று பதிலடி கொடுத்தது. எனினும், தொடர் முயற்சிகளை கைவிடாத இந்திய அணி இதனைத்தொடர்ந்து நடந்த 4வது டெஸ்டில் வென்று அசத்தியுள்ளது. எனவே தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த 4வது டெஸ்டில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு வழிவகுத்த முக்கிய வீரர்களில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவும் ஒருவராக உள்ளார். இந்த ஆட்டத்தில் மிகத் துல்லியமாக பந்துகளை வீசிய அவர் தனது 100 விக்கெட்டை கைப்பற்றினார். மேலும், இந்த தொடர் முழுதும் சிறப்பாக பந்து வீசி இதுவரை 18 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இதனால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் விளையாடி 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய பந்து வீச்சாளர் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

இது ஒருபுறமிருக்க, இந்த ஆட்டத்தில் சரியான லெந்த் மற்றும் யார்க்கர் பந்துகளை வீசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பும்ரா, ஐந்தாவது நாள் ஆட்டத்தில் தனது பந்து வீச்சால் இங்கிலாந்து அணி வீரர்களை மிரளச் செய்தார். அதோடு, கிரிக்கெட்டில் மறக்க முடியாத நாளாகவும் மாற்றி இருந்தார். குறிப்பாக, மதிய உணவுக்குப் பின்னர், 6-3-6-2 என்ற அவரின் வேகப்பந்து வீச்சு ஆட்டத்தில் திருப்பு முனையை ஏற்படுத்தியது.

இப்படி தனது சிறப்பான மற்றும் துல்லியான பந்து வீச்சால் இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி கொடுத்து வரும் பும்ரா அந்த அணிக்கு எதிரான கடைசி மற்றும் 5 வது டெஸ்டில் களமிறக்கப்பட வேண்டும் என ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் இப்படி குறிப்பிட காரணம் உள்ளது. அது என்னவென்றால், பும்ரா இந்த தொடரில் 150 க்கும் மேற்பட்ட ஓவர்களை ஏற்கனவே வீசியுள்ளார். இந்திய அணியின் வெற்றிக்கு பின்னால் பணிச்சுமை மேலாண்மை முக்கிய அம்சமாக இருந்து வரும் நிலையில், அவர் கடைசி மற்றும் 5 வது டெஸ்டில் களமிறங்க வாய்ப்பு இருக்காது என குறைப்படுகிறது.

இந்நிலையில், இது தொடர்பாக பேசியுள்ள முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், “செப்டம்பர் 10 (வெள்ளிக்கிழமை) முதல் மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்டு மைதானத்தில் நடக்க உள்ள 5வது மற்றும் கடைசி டெஸ்டில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கக் கூடாது. இந்திய அணி இந்த தொடரை வென்றிருந்தால், அவருக்கு ஓய்வு அளிக்கலாம் என்று அணி நிர்வாகம் நினைத்திருக்கலாம். ஆனால் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் மட்டுமே உள்ளது. தொடரை இன்னும் கைப்பற்றவில்லை. எனவே, பும்ரா நிச்சயம் அணியில் விளையாட வேண்டும்.” என்றுள்ளார்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil