Cricket news in tamil: இந்தியா - இங்கிலாந்து பெண்கள் அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) பிரிஸ்டலில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 396 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து களம் கண்ட இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 231 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனால் இந்திய அணியை மீண்டும் பேட்டிங் செய்ய அழைத்தது இங்கிலாந்து அணி (பாலோ - ஆன்). எனவே மீண்டும் களமிறங்கிய இந்திய அணி 2 விக்கெட்டை இழந்து 154 ரன்களைச் சேர்த்து நிதான ஆட்டத்தை தொடர்ந்துள்ளது.
இந்த டெஸ்ட் போட்டியின் மூலம் முதன் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு அறிமுகமாகியுள்ள ஷபாலி வர்மா, அவரது முதல் இன்னிங்சில் 96 ரன்கள் எடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். இருப்பினும், தொடர்ந்து நடந்து வரும் 2வது இன்னிங்ஸில் பதிவு செய்யவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 63 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆட்டமிழ்ந்தார்.
இந்த நிலையில், தான் களமிறங்கிய முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியிலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள ஷபாலி வர்மா, இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.
அப்படி எந்த சாதனையை இவர் முறியடித்தார் என்றால், மிக இளம் வயதில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டின் ஒரே போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் 50 ரன்களுக்கு மேல் அடித்த வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் பதிவு செய்திருந்தார். இதை அவர் கடந்த 1990ஆம் ஆண்டு (17 வயது 107நாட்களில்) இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் அடித்திருந்தார்.
இதை தற்போது 17 வயது 139 நாட்களில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டு இன்னிங்ஸ்களிலும் அறிமுக போட்டியிலேயே 50 ரன்களை கடந்து ஷபாலி வர்மா அசத்தியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“