Cricket news in tamil: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நட்சத்திர வீரராக வலம் வந்தவர் அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அஃப்ரிடி. அணியில் சாதாரண பந்து வீச்சாளராக அறிமுகமாகிய இவர், பின்னாளில் அவரது பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் கவனம் ஈர்த்து ஆல்-ரவுண்டர் வீராகவும், கேப்டனாக வலம் வந்தார். மேலும் அந்த அணிக்காக அதிக ஒரு நாள் போட்டிகளில் களமிறங்கிய வீரர்களில் முதன்மையானவராகவும் அப்ரிடி உள்ளார். அதோடு பாகிஸ்தான் அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் 4வது வீரராகவும் (8027 ரன்கள்) உள்ளார். அவரது சராசரி 23.81ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 116 ஆகவும் உள்ளது.

சமீபத்தில் பாகிஸ்தான் யூடியூப் சேனலானா பிஎஸ்போர்ட்ஸ் கெலோ ஆசாடி சே – க்கு அவர் அளித்த பேட்டியில் முன்பு தன்னை அதிகம் கவர்ந்த வீரர்கள் குறித்து பேசியிருந்தார். அதில் பாகிஸ்தான் வீரர்கள் இன்சமாம்-உல்-ஹக் மற்றும் சயீத் அன்வர் மேலும் சில பெயர்களையும் குறிப்பிட்டு இருந்தார்.

“எனது ஆரம்ப ஆண்டுகளைப் பற்றி பேசினால், இன்சமாம் உல் ஹக் மற்றும் சயீத் அன்வர் ஆகியோர் என்னை மிகவும் கவர்ந்த வீரர்களாக உள்ளனர். அவர்களின் விளையாடும் பாணியை பின்பற்றுவதற்காகவே பலர் டிவியின் முன் அமர்ந்து இருந்தனர். நான் அவர்களுடன் விளையாட ஆரம்பித்தபோது எனது கனவை நிறைவேற்றினேன். இதில், என்னை அதிகம் கவர்ந்த மற்ற நாடுகளைச் சேர்ந்த வீரர்களாக பிரையன் லாரா மற்றும் க்ளென் மெக்ராத் இருந்தனர், ”என்று அப்ரிடி கூறினார்.

இப்போது உள்ள வீரர்களில் உங்களை அதிகம் கவர்ந்த வீரர் யார் என்ற கேள்விக்கு பதிலளித்த அஃப்ரிடி பாபர் ஆசாம் மற்றும் ஃபக்கர் ஜமான் போன்ற வீரர்களை சுட்டிக்காட்டினார். அவரை கவர்ந்த இந்திய வீரர் குறித்து வெளிப்படுத்துவதற்கு முன்பு ஏபி டிவில்லியர்ஸ் பெயரை குறிப்பிட்டு இருந்தார்.
“தற்போதைய தலைமுறையில் என்னை அதிகம் கவர்ந்த வீரர்கள் என்றால், நான் ஏபி டிவில்லியர்ஸ், விராட் கோலி, பாபர் ஆசாம் என்று கூறுவேன். அவர்கள் மிகச்சிறந்தவர்கள்” என்று அஃப்ரிடி கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“