Cricket news in tamil: 2021-ம் ஆண்டிற்கான ஐபிஎல் ஏலம் நேற்று முன் தினம் சென்னையில் நடைபெற்றது. இதில் 5.25 கோடி ரூபாய்க்கு தமிழக வீரர் 'ஷாருக் கான்' பஞ்சாப் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.
தமிழக அணியின் ஆல் - ரவுண்டர் வீரர் ஷாருக் கான், கடந்த மாதம் நடைபெற்ற செய்யது முஸ்டாக் அலி கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், கோப்பையை வென்ற தமிழக அணியில் இடம் பெற்றிருந்தார். இந்த போட்டிகளில் இவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், ஏலத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, பஞ்சாப் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப் அணியில் தேர்வு செய்யப்பட்டது குறித்து அவர் கூறுகையில், "ஏலத்தில் எனது பெயர் வந்தபோது நான் பதற்றமடையவில்லை. நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். பேருந்தில் இருந்த எனது அணி வீரர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். குறிப்பாக தமிழக அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் மிகவும் மகிழ்ச்சியில் இருந்தார் என்று கூறியிருந்தார்.
ஐபிஎல் ஏலத்தை பேருந்தில் இருந்தவாறு லைவ்வில் பார்த்துக் கொண்டிருந்த தமிழக அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக்கும், அணியின் ஏனைய வீரர்களும் ஷாருக் கான் பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டதை அறிந்து மகிழ்ச்சியில் கத்தி ஆரவாரம் செய்த வீடியோ இணையத்தில் வைரலானது குறிப்பித்தக்க ஒன்று.
சென்னை வேளச்சேரியை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஷாருக் கான், தமிழக கிரிக்கெட் அணியில் முக்கிய வீரர்களுள் ஒருவர் ஆவர். இவரது கிரிக்கெட் விளையாடும் கனவு, இவரின் அப்பாவிடம் இருந்து வந்தது என்றே கூறலாம். ஏனென்றால் ஷாருக் அப்பா மசூத் முன்னாள் கிளப் கிரிக்கெட் வீரர் ஆவர்.
தற்போது இந்தோரில் நடக்கும் விஜய்ஹசரே 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டுள்ள ஷாருக், இந்திய அணி வீரர்கள் ரவிச்சந்திர அஸ்வின், தினேஷ் கார்த்திக் உள்ளிட்டோர் பயிற்சி பெற்ற செயின்ட்.பேட்ஸ் அகாடமியில் தான் பயிற்சி பெற்றுள்ளார்.
பஞ்சாப் அணியில் தேர்வு செய்யப்பட்டது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், பயிற்சியாளர் அனில் கும்ப்ளே மற்றும் அந்த அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் ஆகியோரின் கீழ் விளையாடுவதில் மிகவும் ஆர்வமாக உள்ளதாக பஞ்சாப் அணியில் பதிவிட்டுருந்த ட்விட்டர் வீடியோவில் கூறியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil