Shardul Thakur Tamil News: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி நேற்று செப்டம்பர் 2ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில், பேட்டிங் செய்ய களம் கண்ட இந்திய அணி 191 ரன்கள் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய அணி வலுவான ஸ்கோரை எட்டும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அணியின் முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். நிதான ஆட்டத்தை தொடர்ந்த கேப்டன் கோலி அரைசதம் கடந்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்னில் அவுட் ஆகினர்.

ஆனால், இஷாந்த் சர்மாவிற்கு பதிலாக இந்த ஆட்டத்தில் சேர்க்கப்பட்டு, 8வது வீரராக களமிறங்கிய ஷர்துல் தாகூர் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். மேலும், களமிறங்கியது முதலே அசத்தலாக ஆடிய அவர் 36 பந்துகளில் 57 ரன்கள் சேர்த்தார். இவரின் அதிரடி ஆட்டத்தை கண்டு மிரண்டு போன ரசிகர்கள், ‘ஷர்துல் டி-20 போல் விளையாடுகிறார்’, என்றும் ‘இந்த மாத இறுதியில் நடக்கவுள்ள ஐபிஎல் தொடருக்கு இப்போதே ஒத்திகை பார்க்கிறார்’ என்றும் சமூக வலைத்தளங்களில் அவரை புகழ்ந்து வருகின்றனர்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷர்துல் ஏற்கனவே தனது முதல் அரை சதத்தை பதிவு செய்துள்ள நிலையில் தற்போது இங்கிலாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் 2வது அரை சதத்தை விளாசியுள்ளார். மேலும் இந்த அரை சதம் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் பல சாதனைகளை புரிந்திருக்கிறார்.

இந்திய ஜாம்பவான் வீரர் கபில்தேவ் 1982ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கெதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 30 பந்துகளில் அரை சதம் கடந்திருந்தார். அவரது சாதனையை தொடர்ந்து இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரும், தொடக்க வீரருமான வீரேந்திர சேவாக் கடந்த 2008ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 32 பந்துகளில் அரைசதம் கடந்தார்.
தற்போது அதே இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் 31 பந்துகளில் அரைசதம் விளாசியுள்ள ஷர்துல் தாகூர் சேவாக்கின் சாதனையை பின்னுக்குத் தள்ளியுள்ளார். மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக அரை சதம் அடித்த 2வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil