mohammed siraj news in tamil: இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி, மழை காரணமாக டிரா ஆன நிலையில், தொடர்ந்து ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் 151 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அணியை வீழ்த்தியது. இந்நிலையில், இவ்விரு அணிகளும் மோதும் 3-வது டெஸ்ட் லீட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் அசத்தலான வெற்றிக்கு ஷமி – பும்ரா ஜோடியின் அதிரடி ஒரு காரணம் என்றால், இளம் வீரர் முகமது சிராஜின் துல்லியமான பந்து மற்றொரு காரணமாகப் பார்க்கப்படுகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்த சிராஜ் அடுத்த இன்னிங்சிலும் தனது விக்கெட் வேட்டை தொடர்ந்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்திய அணியில் முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, இஷாந்த் ஷர்மா போன்ற அனுபவ வீரர்கள் இருந்தாலும் இளம் வீரரான சீராஜின் பந்து வீச்சு மெச்சும் படியாக இருந்தது. மேலும் இவரின் துல்லியமான பந்து வீச்சை சந்திக்க மறுத்த இங்கிலாந்து அணியினர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். கேப்டன் கோலி இவரை சரியான நேரத்தில் பயன்படுத்தியதால் அந்த அணி சொந்த மண்ணிலே திணறியது.

தற்போது 3வது டெஸ்ட் போட்டிக்கு முன்னர் பேட்டியளித்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முகமது சிராஜின் இந்த அசாத்திய திறனை பாராட்டியுள்ளதோடு, எந்த பேட்ஸ்மேனையும் எந்த நேரத்திலும் அவரால் வீழ்த்த முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் குறித்து கேப்டன் கோலி கூறியதாவது;-
சிராஜின் வளர்ச்சியை பார்த்து நான் ஆச்சரியப்படவில்லை. ஏனெனில் நான் அவரை அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். அவர் ஒரு நல்ல திறனுடைய பந்துவீச்சாளர். அவருக்கு நாம் நம்பிக்கை கொடுத்தால் நிச்சயம் அவரால் சிறப்பாக செயல்பட முடியும். ஆஸ்திரேலிய தொடரின் போது அவர் வெளிப்படுத்திய சிறப்பான பந்துவீச்சு தற்போதும் தொடர்கிறது. ஆஸ்திரேலிய தொடரில் இருந்து அவர் நல்ல நம்பிக்கையை பெற்று விளையாடி வருகிறார்.

சிராஜால் எந்த நேரத்திலும் எந்த ஒரு பேட்ஸ்மேனையும் வீழ்த்த முடியும். அதுமட்டுமின்றி போட்டியின் முடிவிலும் அவரால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். எவ்வித அச்சமும் இல்லாமல் வீரர்களை ஆட்டமிழக்கச் செய்ய முனைப்பு காட்டுவார். அவர் பின்வாங்கப்போவதில்லை என்று நான் நம்புகிறேன். அவருடைய இந்த வளர்ச்சி எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.
இவ்வாறு கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil