Cricket news in tamil: இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 டி20 போட்டிகள் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் களம் கண்ட ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தொடர் விக்கெட் சரிவை எதிர்கொண்டது. அணியின் முன்னணி வீரர்களும் களமிறங்கிய அறிமுக வீரர்களும் சொதப்பி தள்ளினர். 50 ரன்களை கடக்கவே இந்திய அணி தடுமாறியது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்களை மட்டுமே சேர்த்தது.

அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய கெய்க்வாட் 14 ரன்களுடனும், தவான் ரன் எதுவும் இன்றியும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து வந்த படிக்கல் 9, சாம்சன் 0, நிதீஷ் ராணா 6 ஆகியோர் ஒற்றை இலக்கங்களில் வெளியேறினர். இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய புவனேஸ்வர் குமார் (16 ரன்கள்), மற்றும் குல்தீப் யாதவ் (23 ரன்கள்) நிதானமாக ஆடி ஆறுதல் அளித்தனர். இலங்கை அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா 4 ஓவர்கள் வீசி 9 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

82 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 14.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதோடு தொடரையும் கைப்பற்றி அசத்தியது. சர்வதேச டி20 தொடர்களில் தொடர் ஆதிக்கத்தை செலுத்தி வந்த இந்திய அணிக்கு இந்த தோல்வி சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2008ம் ஆண்டிற்குப் பிறகு இந்திய அணிக்கு எதிரான ஒரு தொடரைக் கூட கைப்பற்றதாத இலங்கை அணி தற்போது கைப்பற்றி புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil“