Cricket Tamil News: இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முக்கிய கேப்டனாக பார்க்கப்படுபவர் கேப்டன் விராட் கோலி. 3 வகையான கிரிக்கெட் அணிகளையும் தலைமையேற்று வழிநடத்தி வரும் இவர் மிகச் சிறப்பாகவும், திறமையாகவும் செயலாற்றி வருகிறார். எனினும், இவரது தலைமையிலான இந்திய அணி ஐசிசி நடத்திய உலக கோப்பை தொடரில் ஒரு கோப்பையை கைப்பற்றவில்லை என்பது பெரிய குறையாக நீடித்து வருகிறது. மேலும், அவ்வப்போது கடுமையாக விமர்சிக்கப்படும் இவர் கேப்டன் பதிவில் விலக வேண்டும் என சர்ச்சைகள் எழுந்தன.
இந்நிலையில், நீடித்து வந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் டி20 கிரிக்கெட்டில் இருந்து கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று விராட் கோலி அறிவித்தார். கோலி பதவி விலகும் பட்சத்தில் இந்திய டி20 அணியின் அடுத்த கேப்டனாக யார் என்ற விவாதம் தற்போது எழுந்துள்ளது. மேலும், அந்த பதவிக்கு இந்திய அணி நிர்வாகம் யாரை நிமிக்கும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தொற்றியுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர், கோலிக்கு பிறகு அந்த பதவிக்கு இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல் ராகுல் தான் தகுதியானவர் என குறிப்பிட்டுள்ளார்.
"இந்திய அணி ஒரு புதிய கேப்டனை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டால் அதற்கு கே.எல் ராகுல் தான் சரியான வீரராக இருப்பார். தற்போதுவரை அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த தொடரில் கூட தனது அபாரமான பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி இருந்தார். அது மட்டுமின்றி சர்வதேச கிரிக்கெட்டிலும், ஐபிஎல் தொடரிலும் அவர் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார்.
ஆதலால், கே.எல் ராகுலை இந்திய அணியின் அடுத்த கேப்டனாக உருவாக்க முயற்சி செய்யலாம். ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியை மிகச் சிறப்பாக வழிநடத்தி வருகிறார். எனவே இந்திய அணியில் அவரை முதலில் துணை கேப்டனாக செயல்பட வைத்து பின்னர் படிப்படியாக கேப்டனாக உயர்த்தலாம்" என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.