Cricket news in tamil: ஐபிஎல் போட்டிகள் என்றாலே இந்தியாவில் கிரிக்கெட் திருவிழா தான். உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் ஒரு பக்கம் வானவேடிக்கை காட்ட, அவர்களின் அதிரடிக்கேற்ப மறுபுறம் 'சீயர் கேர்ள்ஸ்' நடனம் ஆட ஒரே கோலாகலமாக தான் இருக்கும். அதோடு மைதானம் முழுவதும் நிரம்பி இருக்கும் ரசிகர்களின் ஆரவாரம் விண்ணை முட்டும்.
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த போட்டிகள், இந்த ஆண்டு இந்தியாவில் நடக்க உள்ளது. அடுத்த மாதம் 9ம் தேதி தொடங்கி மே 30ம் தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்டம்பாட்டத்திற்கு சற்றே பஞ்சமிருக்காத ஐபிஎல் போட்டிகளில், சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை. பல சர்ச்சைகளை சந்தித்து 14 வது சீசனுக்கு வந்துள்ள ஐபிஎல் - லின் டாப் - 5 சர்ச்சைகளை இங்கு பார்க்கலாம்.
சர்ச்சை எண் 5 - அஸ்வினின் ‘மன்காடிங்' ரன் அவுட்
2019ம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் சுழல் பந்து வீச்சாளர் அஸ்வின், அந்த அணியின் ஜோஸ் பட்லரை ‘மன்காடிங்' ரன் அவுட் செய்தார். அஸ்வின் பந்து பந்து வீச முன்றபோது பட்லர் இரண்டு அடி கிரீஸ் கோட்டை விட்டு நகர்ந்தார். அதை பார்த்த அஸ்வின் உடனே ஸ்டெம்பில் பாலை அடித்து அவுட் கேட்டார் . நடுவரும் அவுட் கொடுத்தார். இது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது. அஸ்வின் பட்லரை அவுட் செய்யவில்லை என்றால் அந்த அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு இருந்திருக்கும்.
இந்த சர்ச்சையில் அஸ்வினுக்கு ஒரு சாராரும், பட்லருக்கு ஒரு சாராரும் சப்போர்ட் செய்து கருத்து தெரிவித்தனர். கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியின் போது, ஆரோன் பிஞ்சை அதே போன்று அவுட் செய்ய முயற்சித்து 'வார்னிங்' என்று கூறினார் அஸ்வின். இந்த சம்பவம் குறித்து பின்னர் பேசிய அஸ்வின் 'ஆரோன் எனது நண்பர்' என்று கூறியிருந்தார்.
சர்ச்சை எண் 4 - தி ட்ரக் வாரியர்ஸ்
2012 ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் அறிமுகமாகிய அணி புனே வாரியர்ஸ். இந்த அணி மைதானத்திலும், வெளியிலும் பல சர்ச்சைகளை சந்தித்தது. அந்த அணியின் வெய்ன் பார்னெல் (தென்னாப்பிரிக்க வீரர்) மற்றும் ராகுல் சர்மா (இந்திய வீரர்) ஆகியோர் பல திரைப்பட பிரபலங்களுடன் ஒரு விருந்திற்கு சென்றுள்ளனர். காவல்துறையினர் அந்த இடத்தை சோதனையிட்டு, இரண்டு வீரர்களையும் மற்றும் சிலரையும் கைது செய்தனர். விசாரணையில் இரு வீரர்களும் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ளனர். ஆனால் பரிசோதனையின் போது அவர்கள் போதைப்பொருள் எடுத்துக்கொண்டது தெரிய வந்து. அப்படி இருந்தும் அவர்கள் மீது பெரிதாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சர்ச்சை எண் 3 - ஷாரூக் கானும் வான்கடே மைதானத்தின் காவலரும்
பாலிவுட்டின் பாட்ஷாவாகவும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளராவும் உள்ள ஷாரூக்கானை வான்கடே மைதானத்திற்குள் நுழைய கூடாது என்று மைதானத்தின் நிர்வாகம் தெரிவித்தது.
2012 -ம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியின் போது, ஷாரூக்கான் குடிபோதையில் சத்தம் எழுப்பி மைதானத்திற்குள் நுழைந்ததாகவும், பாதுகாப்புப் பணியாளர்களை துஷ்பிரயோகம் செய்ததாகவும் கூறிய மும்பை கிரிக்கெட் சங்கம் (எம்.சி.ஏ), வான்கடே மைதானத்திற்குள் ஷாருக்கான் நுழைய 5 ஆண்டுகள் தடை விதித்தது.
விகாஸ் தல்வி எனும் காவலர், ஷாருக்கான் வீரர்களின் ஆடை அறைகளுக்குள் நுழைவதற்கு எதிராக எச்சரித்தார். ஆனால் ஷாரூக் தன் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் சேர்ந்து கொண்டு காவலரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது மைதானத்தில் மிகுந்த பரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் குழந்தைகளை அழைத்துச் செல்லவே மைதானத்திற்கு வந்ததாகவும், தல்வி மராத்தியில் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும் ஷாரூக் கூறியிருந்தார்.
சர்ச்சை எண் 2 - ஸ்ரீசாந்த்தின் கன்னத்தை பதம்பார்த்த ஹர்பஜன் சிங்
2008ம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டி ஒன்றில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்பஜன் சிங் செயல்பட்டார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் மும்பை அணி சரியாக சோபிக்காமல் தோல்வி அடைந்தது. பஞ்சாப் அணியில் விளையாடிய ஸ்ரீசாந்த் சிறப்பாக பந்து வீசியிருந்தார்.
போட்டி முடிந்ததும் இரு அணி வீரர்களும் கை குலுக்கினர். அப்போது மும்பை அணி வீரர்களை கிண்டலடித்து கொண்டே வந்த ஸ்ரீசாந்த்தின் கன்னத்தில் ஹர்பஜன் 'பளார்' என்று அறைந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
எனவே ஹர்பஜனை தொடரில் இருந்தே இடைநீக்கம் செய்தது மும்பை அணி. ஆனால் 'ஹர்பஜன் விளையாட்டுக்குத்தான் அறைந்தார்' என்று கூறிய ஸ்ரீசாந்த் பின்னர் ஹர்பஜனுடன் நண்பரானார்.
சர்ச்சை எண் 1 - ஸ்பாட் பிக்ஸிங் ஊழல்
ஐபிஎல் போட்டிகளின் வரலாற்றிலே மிகப்பெரிய சர்ச்சை என்றால் ஸ்பாட் பிக்ஸிங் ஊழலைத்தான் கூறலாம். 2013ம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் ஸ்பாட் பிக்ஸிங் நடந்ததாக பெரும் சர்ச்சை கிளம்பியது. அதில் அப்போதைய பிசிசிஐ-யின் தலைவராகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளராகவும் இருந்த என். ஸ்ரீனிவாசனுக்கு முக்கிய பங்குண்டு என்றும் கூறப்பட்டது. எனவே அவரை பிசிசிஐ-யின் தலைவர் பதவியை ராஜினாமா செய்யுமாறு உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டது. அதோடு நாட்டின் பல்வேறு பகுதியில் ஸ்பாட் பிக்ஸிங்கில் சம்பந்தப்பட்ட பல புக்கிகள் கைது செய்யப்பட்டனர்.
அதே வேளையில் ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக இந்திய வீரர் ஸ்ரீசாந்த் உட்பட பல வீரர்களின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்குப்பதிவு செய்யப்பட்ட வீரர்கள் ஐபிஎல் மற்றும் உள்நாட்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது.
நீண்ட நெடிய விசாரணைக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக நிரூபிக்கப்பட்டு, 2 ஆண்டுகள் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.