Cricket news in tamil: விஜய் ஹசாரே கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் மத்திய பிரதேச மாநிலம் இந்தோரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று எலைட் பி பிரிவில் இடம்பிடித்துள்ள தமிழகம் மற்றும் ஆந்திர பிரதேச அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆந்திர அணி வெற்றி பெற்றது.
முதலில் களமிறங்கிய தமிழக அணி, சரியான துவக்கம் கிடைக்கமால் திணறியது, அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஹரி நிஷாந் (4) மற்றும் ஜகதீசன் (11) சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய சாய் கிஷோர், அபராஜித் அணியின் விக்கெட்டுகள் சரிவை தடுக்க தொடர்ந்து போராடி வந்தனர். 51 பந்துகளில் 4 பவுண்டரிகளை பறக்கவிட்டு சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த சாய் கிஷோர் ஆந்திர அணியின் ஸ்டீபன் வீசிய 14 ஓவரில் அந்த அணியின் புவியிடம் கேட்ச் கொடுத்து 29 ரன்களிலே வெளியேறினார்.
மறுமுனையில் களமிறங்கிய இந்திராஜித், ஸ்டீபன் வீசிய அடுத்த ஓவரில் புவியிடம் கேட்ச் கொடுத்து 3 ரன்களில் பெவிலியன் நோக்கி நடந்தார். அடுத்து வந்த அணியின் கேப்டனும் ஸ்டீபன் வீசிய பந்தில் வெளியேற, அதன் பின் களமிறங்கிய சோனு யாதவ் விக்கெட் சரிவை கொஞ்ச நேரம் தாக்குப்பிடித்தார்.
37 பந்துகளில் 5 பவுண்டரிகளை விளாசியிருந்த சோனு, ஆந்திராவின் ஷோயிப் எம்.டி கான் வீசிய 31-வது ஓவரில் 37 ரன்களுடன் அவுட் ஆகி வெளியேறினார். அணியை மீட்க மறுமுனையில் போரடிக் கொண்டிருந்த அபராஜித் 62 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஷாருக் கான், முகமது, மற்றும் முருகன் அஸ்வின் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 41.3 ஓவர்களில் 176 ரன்களைச் சேர்த்திருந்தது தமிழக அணி.
ஆந்திர தரப்பில் சிறப்பாக பந்து வீசிய ஸ்டீபன் மற்றும் ஷோயிப் எம்.டி கான் தலா 3 விக்கெட்டுகளையும், கிரிநாத் ரெட்டி 2 விக்கெட்டுகளையும், நிதீஷ் ரெட்டி 1 விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர்.
50 ஓவர்களுக்கு 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்திய ஆந்திர அணி, அஸ்வின் ஹெப்பாரின் அதிரடி சதத்தால் 29.1 ஓவரிலே அந்த இலக்கை எட்டியது. இந்த போட்டியில் அதிரடி காட்டிய அஸ்வின் ஹெப்பார் 84 பந்துகளில் 5 சிக்ஸர் மற்றும் 11 பவுண்டரிகளை பறக்கவிட்டு 101 ரன்கள் எடுத்திருந்தார். மறுமுனையில் அவருடன் ஆடிய ரிக்கி பூய் 41 பந்துகளில் 2 சிக்ஸர் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 52 ரன்களை சேர்த்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” t.me/ietamil