Cricket news in tamil: இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இதில் கடந்த 4ம் தேதி துவங்கிய முதலாவது டெஸ்ட் போட்டி ட்ராவில் முடிந்துள்ள நிலையில், 2வது டெஸ்ட் போட்டி இன்று வியாழக்கிழமை முதல் தொடங்குகிறது.

இந்த இரு அணிகள் மோதிய முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் என பலர் எதிர்பார்த்திருந்த நிலையில், 5ம் நாள் நாள் ஆட்ட நேரத்தில் மழை குறுக்கீடால் இந்திய அணியின் வெற்றி நழுவி டிராவில் முடிந்தது. இருப்பினும் இந்த போட்டியில் இந்திய அணி வீரர்களின் செயல்பாடு திருப்தியாகவே இருந்தது. குறிப்பாக இந்த போட்டியில் அஷ்வினுக்கு பதிலாக விளையாடிய ரவீந்திர ஜடேஜா தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
ஜடேஜா முதல் இன்னிங்சில் 3 ஓவர்கள் மட்டுமே வீசி இருந்தாலும் பேட்டிங்கில் பின்வரிசையில் களமிறங்கி அணிக்கு தேவையான ரன்களை எட்ட உதவினார். மேலும், இங்கிலாந்து அணியின் பந்து வீச்சு தாக்குதலை முறியடித்து அந்த அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருந்தார்.

ஜடேஜாவின் இந்த அசத்தலான ஆட்டத்தை புகழ்ந்து பேசியுள்ள முன்னாள் இந்திய அணி வீரரும், அதிரடி ஆட்டக்காரருமான விரேந்தர் சேவாக், “ஜடேஜா தற்போது தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆனால், அவர் இன்னும் முழுத்திறனுடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும் இது குறித்து அவர் பேசுகையில், “இந்திய அணியின் மிக முக்கியமான வீரர் ஜடேஜா. டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் போது அவர் பந்து வீச்சில் 25 முதல் 30 ஓவர்கள் வீசி விடுகிறார்.

அதேபோல் பேட்டிங்கில் ஏழாவது அல்லது எட்டாவது இடத்தில் இறங்கி அணிக்கு தேவையான மற்றும் முக்கியமான ரன்களை அவர் சேர்த்து தருகிறார். இவர் அடித்த அரைசதம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற உதவியது. இப்படி தனக்குள் இருக்கும் திறமையை அவர் அமைதியாக வெளிப்படுத்தி வருகிறார். அவர் ஒரு மிகச் சிறப்பான வீரர்” என சேவாக் கூறியுள்ளார்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil“